பக்கம் எண் :

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே சூ 15123

பாரதியார்
  

15. உரிப்பொருள். . . . . பெறுமே
  

கருத்து :-  இது  ஐந்திணைகள்  போலவே,  அத்திணைகளின்  சார்பான  பிற  உரிப்பொருள்களும் பல
நிலங்களிலும் ஏற்ற பெற்றி வந்து மயங்கும், என்று கூறுகிறது.
  

பொருள் :- உரிப்பொருளல்லன  -  “திணைக்குரிப் பொருளே”  என  வரையறுத்த  புணர்தல்  முதல்
ஐந்திணையல்லாத  உரிப்பொருளான  தலைமக்கள்   ஒழுக்கமாவள  பிற;  மயங்கவும் பெறும் -எந்நிலத்தும்
வந்து கலத்தலுமுண்டு.
  

குறிப்பு :- புணர்தல்,  பிரிதல்,  இருத்தல்,  இரங்கல், ஊடல் எனும் திணைக்குரிப்பொருள் ஐந்துமின்றி
அவற்றின்  சார்பாய்  அவ்வுரிப்பொருள்களோடு  அமைத்துக்  கோடற்பாலனவாய், பிற்றைச்  சூத்திரங்கள்
கூறும்  ‘கொண்டுதலைக் கழிதல்’ ‘பிரிந்தவணிரங்கல்’  ‘கலந்த பொழுது’ ‘காட்சி’ முதலியனவும், ஐந்திணை
உரிப்பொருள்களைப்  போலவே  ஒரு நிலத்துக்குந் தனியுரிமையின்றி  எல்லாநிலத்தும்  வந்து  மயங்கவும்
பெறும். ஈற்றேகாரம் அசைநிலை.
  

திணைக்குரிப்   பொருள்களாக  விதந்துகூறும்  புணர்தல்  முதலிய  ஐந்தும்  எந்த  நிலத்தும்  வந்து
மயங்குதல்   மேற்சூத்திரத்திற்   கூறப்பட்டது.    பேரளவில்   அவ்வைந்தனுளடங்காமல்   இயல்  பற்றி
உரிப்பொருளா யமைவனபிறவுமுள என்பதை இவ்வியல் ‘கொண்டுதலைக்கழிதல்’  ‘கலந்தபொழுதும்’  என்ற
சூத்திரங்களிற்  சுட்டுவதால்,  அத்தகைய  பிற  அகவுரிப்  பொருள்களும்,  விதந்தோதிய  ஐந்திணையுரிப்
பொருள்கள்   போலவே,  வரையறையின்றி  யெந்த  நிலத்தும்  வந்து   மயங்குதல்   கூடும்   என்பதை
இந்தச்சூத்திரம்    விளக்குகிறது.    ஈண்டு    ‘உரிப்பொருளல்லன’    என்பது    முன்னைச்சூத்திரத்தில்
திணைக்குரிப்பொருள்’  என  விதந்தோதிய  தலைமக்களொழுக்கம்  ஐந்துமல்லாத  பிறவெனக்  கொள்ளல்
வேண்டும்.   ‘உரிப்பொருளல்லன’   என்பதை  ‘அல்லன   உரிப்பொருள்’   எனச்   சொன்மாற்றி,  முன்
விதந்தோதிய     ஐந்துமல்லாத     உரிப்பொருளாவன     எனக்கொள்ளுதே     ஈண்டுப்    பெரிதும்
பொருத்தமுடைத்தாம்.