இன்றியமையாத் தொடர்புடையனவற்றைச் சுட்டுவதாம், புகுமுகம் புரிதல், நகுநயம் மறைத்தல் முதலியன புணர்தலுக்கு முன்னெழும் நிமித்தங்களாம். அணிந்தவை திருத்தல், பாராட்டெடுத்தல் முதலியன புணர்வின் பின்னர் நிகழும் நிமித்தங்களாம். இவ்வாறு தொடர்பணிமையற்றன. நிமித்தமாகா. “அன்னபிறவும் - நிமித்தமென்ப” என்னும் தெய்ப்பாட்டில் 19-ஆம் சூத்திரமும் இதை வலியுறுத்தும். இவ்வாறே பிறதிணைகளுக்கும் நிமித்த வகைகளை ஏற்ற பெற்றி அமைத்துக்கொள்க, நிறுத்தமுறையானே முன்னர் முதற்பொருளைக் கூறினவர் அதனையடுத்துக் கூறுவதேனெனிற் சொல்லுவன்; அகப் பகுதியில் முதற்பொருள் உரிப்பொருள்கள் அல்லாதன அனைத்தும் கருப்பொருள்களாயமைதலின், முதலில் வரையறைப்பட்டவற்றை விளக்குவான் றொடங்கி, நிலம் பொழுதெனும் இரண்டே வகையுளடங்கும் முதற்பொருள் கூறினதும், அளவறுதிப்படாக் கருப்பொருள்களைக் கூறுமுன், ஐந்து ஒழுக்கத்தளவில் அடங்கும் உரிப்பொருளை இடையிற்கூறியமைத்த பெற்றி உய்த்துணர வைத்தார். அகவகைச் செய்யுள்களனைத்தும் இவ்வைந்திணையே கூறுதலின், எடுத்துக்காட்டு ஈண்டைக்கு வேண்டா. |