இனிக்கற்பொழுக்கத்தில் தலைவனும் தலைவியும் இல்லிருந்து மகிழ்ந்து நல்லறம் செய்தலின் புணர்தலும், அறம் செய்யப் பொருள் தேவையாதலின் வேற்று நாடு சென்று பொருளீட்ட வேண்டுதலினாலும் பரத்தை ஓதல் காவல் தூதுபகை முதலிய காரணங்களினாலும் பிரிவு நேருமாதலின் பிரிவும், பிரிந்தவன் வருந்துணையும் ஆற்றியிருத்தலும், ஆற்றாமை மீதுர இரங்கலும், அவன் வந்தபோது பரத்தமை காரணமாகவோ விரைவில் குறித்த காலத்தில் வாராமை காரணமாகவோ இயல்பாகவோ செயற்கையாகவோ ஊடல் கொள்ளுதலும் நிகழுமாதலின் புணர்தல் முதலியன முறையே கூறப்பட்டன. |