“காமம் சாலா இளமை யோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே.” |
(அகத்-53) |
எனவும். |
“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.” |
(அகத் - 54) |
எனவும் ஓதினாராகலின். |
அஃதேல், கைக்கிளை பெருந்திணை என்பனவற்றை உரிப்பொருள் என, ஓதியது யாதினால் எனின், எடுத்துக்கொண்ட கண்ணே5 ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ என ஓதி அவற்றுள் நடுவண் ஐந்திணைக்குரியன இவை எனப் புணர்தல் முதலாக வகுக்கப்படுதலின், முன்வகுக்கப்படாத கைக்கிளை பெருந்திணையும் உரிப் பொருளாம் என்றுணர்க6. |
புறமாவது, நிரை கோடற்பகுதியும், பகைவயிற் சேறலும் எயில் வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும், வென்றி வகையும், நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையும், என ஏழு வகைப்படும். அஃதேல் புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின், |
“வெட்சி தானே குறிஞ்சியது புறனே” (புறத் -1) எனவும் பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின், அவையும் உரிப்பொருள் ஆம் என்க. அகம் புறம் என்பன காரணப்பெயர். |
5. எடுத்துக் கோடற் கண்ணே என்றிருத்தல் வேண்டும். எடுத்துக் கோடற்கண் - தொடக்கத்தில். 6. நடுவண் ஐந்திணைகளுக்குப் புணர்தல் முதலாக உரிப்பொருள் கூறலால் கைக்கிளை பெருந்திணைகளுக்கும் உரிப்பொருள் உண்டெனக் கோடல் வேண்டும். கைக்கிளை பெருந்திணை என்பனவே உரிப்பொருளாம். |