குறிப்பு:- கொண்டுதலைக் கழிதல் என்பதனால், தலை மக்கள் தம்முள் அது பிரிதலாகாது; நேரே புணர்தலும் அன்றாம். “அது நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமை யானும், உடன் கொண்டு பெயர்தலின் பிரிதலினடங்காமை யானும், வேறு ஓதப்பட்டது” எனும் இளம்பூரணர் குறிப்பு ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இனி, அதுவே போல் பிரிந்த வணிரங்கல் என்பதும் பிரிந்தவர் இரங்கல் என்னுந்திணைக்குரிப் பொருளின் வேறுபட்டது. என்பதை விளக்குதற்காகவே கொண்டுதலைக் கழியுமிடத்துப்பிரிய நேர்ந்துழி ‘அவண் இரங்கல்’ என விதந்து விளக்கப் பெற்றது. இச்சூத்திரம் சுட்டும் இரண்டும் அகத்துறைகளில் உரிப்பொருள்களாகிய தலைமக்களினொழுக்கமாகவே ஆளப்பெறுதலானும், இவை புணர்தல் பிரிதல் இருத்தல் ஊடல் என்ற திணைக்குரிப் பொருள்களைந்தனுள் எதனிலும் அடங்காமையானும் அவற்றினின்றும் வேறு பிரித்து, இச்சூத்திரத்தால் ஒரோவிடத்து உரிப்பொருளாதற்கு உரியன இவையென்று தெளிக்கப்பட்டன. |
ஈண்டு இளம்பூரணர் கொண்டுதலைக் கழிதலைப் பாலைக் கண்ணும், பிரிந்தவணிரங்கலைப் பெருந்திணைக்கண்ணும் வரும் உரிப்பொருள்களாக்கிப் பொருள் கூறுவர். “உடன் கொண்டு போதல் (அதாவது கொண்டு தலைக்கழிதல்) பிரிவினடங்காது” என இவரே கூறியபின், அது பிரிவாம்பாலைக் கண்வருமெனல் தன்னொடுதானே மாறுகொளக் கூறுவதாம். |