இனி, இவ்விரண்டையும் தந்நிலையில் உரிப்பொருளாக்காமல், திணைமயக்கம் என்றுகொண்டு, பாலைத்திணையுள் குறிஞ்சியும் நெய்தலுமாகிய பிறதிணைகளின் மயக்கம் கூறுவதாகக் கொள்ளும் நச்சினார்க்கினியர் உரையும் பொருந்தாது. திணை மயக்குறுதல் என்னுஞ் சொற்றொடரால் மயங்கி ஒரு திணையுள் பிறதிணைகள் ஒருங்கு வந்து மயங்குமெனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாது. தலைமக்களிருவருள் ஒருகாலத்தோரொழுக்கம் நிகழ்வதன்றிப் பலவொழுக்கம் ஒருகாலத்துக்கலந்து மயங்குமென்பது இயல்பன்றாகலின் அதற்கிலக்கணமும் வேண்டப்படா. ஒரு நிலத்திற் பலவொழுக்கங்களும் ஓரொழுக்கம் பல நிலங்களிலும் வேறுபட்ட காலங்களில் நிகழுமென்பதையேமுன் ‘திணை மயக்குறுதல்’ என்னுஞ் சூத்திரத்தால் விளக்கினாரன்றி, ஒரு காலத்துப் பலவொழுக்கந் தம்முள் மயங்குமென்று தொல்காப்பியர் யாண்டும் கூறிலர், அஃதியல் பன்மையின் அதனால் இச்சூத்திரம் திணைமயக்கம் கூறுவதன்று. ஒருசார் உரிப்பொருளாம் பிறசில கூறுதலே கூறுவதன்று. ஒருசார் உரிப்பொருளாம் பிறசில கூறுதலே நுதலிற்று என்பது தெளியப்படும். அன்றியும், இதில் திணை மயக்கம் கூறுதலே அவர் கருத்தாயின் இதனையும் இதுபோன்ற திணைமயக்கம் நுதலும் பிறசூத்திரங்களையும் திணைக்குரிப்பொருள் கூறுஞ் சூத்திரத்திற்கு முன் ‘திணை மயக்குறுதலும்’ ‘உரிப்பொருளல்லன’ என்பவற்றோடு இயைபு நோக்கி இணைத்துக் கூறியிருப்பர். அவ்வாறன்றி, திணைக்குரிப் பொருள் வகை ஐந்தையுங் கூறுஞ் சூத்திரத்திற்குப்பின் இது கூறுப்படுதலால், இதுவும் அவ்வைந்தனுளடங்காத பிற உரிப்பொருள் வகை விளக்குவதையே நுதலிற்றென்பது தேற்றம். |