தெரிகணை விடுத்தலோ விலனே; அரிமதர் மழைக்கண் கலுழ்வகை எவனோ?” இப்பழைய உரைமேற்கோட் செய்யுளில் தமர்வரவு கருதி அதனானேரும் பிரிவினுக்கஞ்சி உடன்போக்கில் தலைம களிரங்கத் தலைவன் தேற்றுங் குறிப்பறிக. |
|
“ஏதங் கருதா திளையோய் நீ என்னோடு போதரு வாய்கொல் புகலென்ற காதலர்பின் வந்தேனை விட்டு மறைந்தார் எமர்வெறுத்தேற் கெந்தநிலை எய்து மினி.” |
எனும் வெண்பாவில் உடன் போக்கிடையில் தொடருந் தலைவி தமரை அவள்முன் இடருறப் பொருவதை வெறுத்துத் தலைவன் மறைய, தற்கொளவந்த தமரைமறுத்துக் கற்பு வற்புறுத்துந் தலைவியினிரக்கம் கூறப்பெறுதல் காண்க. |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் நேரே உரிப்பொருள் (திணை) கூற இயலாதவற்றை உரிப்பொருளிற் சார்த்துமாறு கூறுகின்றது. |
(இ-ள்) தலைவன் தலைவியை உடன்கொண்டு அவளூரின்றும் பிரிதலும், அவ்வாறு பிரிந்தபோது உளதாம் இரங்கலும் ஆகிய இரண்டும் பாலை என்னும் ஓரிடத்தில் உண்டு எனப் புலவர் கூறுவர் என்றவாறு. |
கொண்டுதலைக் கழிதல் என்பது தலைவன் தலைவியிடைப் பிரிவு இன்மையின் பாலையெனவும்படாது, தலைவியின் தமரிற் பிரிந்தமையின் இருவரும் சேர்ந்திருப்பினும் குறிஞ்சியெனவும் படாது ஒரு திணைப்பாற்படுதல் இல்லை. உலக ஒழுக்கத்துள் ஒன்றாகிய இது பாடலுட் பயின்று வரும் காரணத்தால் ஏதேனும் ஒரு திணையில் சார்த்தவேண்டும் இருவர் உள்ளத்தும் பிரியாது சேர்ந்துள்ளோம் என்னும் உணர்விருந்தாலும் இடைவழியில் தமர் வந்து பிரிப்பரோ என்னும் பிரிவச்ச உணர்வே மிக்கு இருத்தலின் பாலைத்திணையிற் சார்த்தலாம். இரங்கல் இல்லாப் பாலை இன்று ஆதலின் கொண்டுதலைக் கழிந்த விடத்து இரங்கும் இரக்கமும் பாலையாகும். |