உரிப்பொருள்களைப் போலவே கருப் பொருள்களும் முதற் பொருள்களான நிலம் பொழுதுகளின் வகைகளில் இயைபு நோக்கி ஏற்ற பெற்றி ஓரோவொன்றிற்கே சிறப்புரிமையுடன் பொருந்துவனவாகும். நிலம் பொழுது வகைகளின் பொருத்தம் நோக்கி அவ்வவற்றிற்குரிய கருப்பொருள்களமையக் கூறுவதே பெருவழக்காம். எனினும், ஓரோவிடத்து நிலம் பொழுதுகளுக்கு நேருரிமையல்லாத திணைக்குரிய வொழுக்கங்கள் மயங்கக்கூறுவது புலனெறி வழக்கென்று மேலே 12, 13வது சூத்திரங்கள் கூறினதால் அவ்விடங்களில் தம்முளியைபின்றி மாறுபட்ட முதலுரிப் பொருள்களில் எதற்கியையக் கருப்பொருள்களின் அமைவு கருதப்படுமென்ற ஐயம் எழுவதியல்பு. அவ்வையமகற்ற ஈண்டு இச்சூத்திரம் எழுந்தது. நிலம் பொழுதுகளோடு பொருந்தக் கருப்பொருள் கூறுவது பெருவழக்கிற்றாயினும், பயன் நோக்கி அகத்திணையிற் சிறந்த ஒழுக்கங்களுக்கியைய நலந்தருவனவற்றை அமைத்துக் கோடல் பாடல் சான்ற புலனெறி வழக்கேயாம் என்பதை இச்சூத்திரம் வலியுறுத்துகிறது. “பாடலுட்பயின்றவை நாடுங்காலை” முதலிற் கருவும் கருவில் உரியுமே முறை சிறந்தன எனுங் தமிழ்மரபை முன் மூன்றாஞ் சூத்திரத்துக் கூறினராதலின், நிலம்பொழுதுகளிலும் சிறந்த உரிப்பொருளொழுக்கத்திற்குப் பொருந்த வரும் கருப்பொருள்கள் முதற் பொருளுக்கியையாவிடத்தும் கடியப்படா என்று இதனால் இந்நூலார் அமைவு காட்டி வற்புறுத்தினார். |
“மாயோன்மேய” எனும் முன்னைச் சூத்திரத்தில் நானிலங்கள் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் திணைப்பெயரே கொள்ளும் என்றமைத்தும் அகத்துறைகளில் திணைக்குரிப் பொருள்களான ஒழுக்கங்களே சிறப்புடையவாதல் பற்றியே |