யாம். ஆனால் ஒரு நிலத்திற் பிறிதொழுக்கம் நிகழ்வதாய்ப் புலனெறி வழக்கஞ் செய்யுமிடத்து அவ்வந்நிலத்தோடு இயற் பொருத்தமில்லாத கருப்பொருள்களைத் திணை நோக்கிக்கூற நேரின், நிகழுமொழுக்கத்துக்கு அக்கருப்பொருள்கள் ஏற்புடையனவாய், அமையும் பயனுடைத்தாதல் வேண்டுமென்று இந்நூலார் ஈண்டு ஒப்பக்கூறியமைத்தார். காடு, மலை, ஊர், கடல் என்பவற்றுள் கூறுவது யாதாயினும் அதற்கியையப் பொருத்தமுடைய கருப்பொருள்களமையக் கூறுதலொன்று அன்றி அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணைக்குப் பொருந்த அமைவதொன்றாம். கருப்பொருள்கள் தமக்குரிய நிலம் பொழுதுகளோடு இயைய வாராவிடங்களில், அவ்வந்நிலத்து நிகழும் ஒழுக்கத்தோடு அமையும் பயனுடையவாதல் வேண்டும். ஈண்டு ‘நிலத்தின் பயத்த’ என்பது நிகழும் ஒழுக்க நிலத்தைக் குறிக்கும். அஃதாவது, அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணையைச் சுட்டும். (நெய்தற்) கடற்கருப் பொருள்களை காட்டொடு சேரக்கூறுமிடங்களில் அப்பொருள்கள் காட்டிற்குரியபயன் தருமென்பது இச்சூத்திரக் கருத்தன்று; காட்டில் நெய்தற்றிணை நிகழுமிடத்துக் காட்டிற்குரிய வல்லாக் கருப் பொருள்கள்வரின், அவை ஆங்கே நெய்தற்றிணைக்கேற்பனவாய் அமையக் கூறுவது புலனெறி வழக்காம் என்பதே இச்சூத்திரம் நுதலிய பொருளாகும். |