அதன்பின் வடிவும் தொழிலும் பண்பும் பயனும் பற்றி உவமிக்கப்படும் உவம இயல் உணர்த்தி, அதன்பின், எல்லாப் பொருட்கும் இடமாகிய செய்யுள் இயல் உணர்த்தி, அதன்பின், வழக்கு இலக்கணமாகிய மரபு இயல் உணர்த்தினார் என்று கொள்க. இவ்வகையினானே அகத்திணை இயல், புறத்திணைஇயல், களவியல், கற்பியல், பொருள் இயல், மெய்ப்பாட்டுஇயல், உவமஇயல், செய்யுள் இயல், மரபு இயல் என ஓத்து ஒன்பதாயின. |
முதலா என்பது முதலாக என்னும் பொருள்பட நின்றது; விகாரம் எனினும் அமையும். இறுவாயாக என்பதன்கண் ஆக என்பது எஞ்சி நின்றது. எழுதிணையும் முற்படக் கிளந்த எனற்பாலது மொழி மாறி நின்றது. கிளந்த என்பது கிளக்கப்பட்டன என்னும் பொருள்பட வந்த முற்றுச் சொல். முற்படக் கிளந்த எழுதிணை கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதிய எனினும் இழுக்காது. “முற்படக் கிளந்த என்றமையான், அவை ஏழும் அகப்பொருள் என்று கூறினாருமாம்; அகம், புறம் எனப் பொருளை வரையறுத்தல் இவர் கருத்தாகலின்: அன்னதாதல், |