மனையோள் எனவரும். இக்காட்டிய இருவகையினும் பெயர்ப்பெயரும் வினைப்பெயரும் பாடலுட் பயின்ற வகையாற் பொருணோக்கி யுணர்க. |
ஈண்டுக் கூறிய திணைநிலைப்பெயரை ‘ஏவன் மரபின்’ (24) என்னுஞ் சூத்திரத்து அறுவகையரெனப் பகுக்குமாறு ஆண்டுணர்க. |
பாரதியார் |
22. பெயரும்.............பெயரே. |
கருத்து:- இது, கருப்பொருள்களோடு அடைவுடைய அகத்திணைக் குரியரான அவ்வந் நிலமக்களின் பெயர்ப் பாகுபாடு கூறுகிறது. |
பொருள்:- திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே ஒவ்வோருரொழுக்கத் தொடும் பொருந்திய முல்லை முதலிய நிலங்களில் புலனெறி வழக்கில் அகத்திணைக் குரியராய்க் கூறப்படும் மக்கட் பெயர்கள்; பெயரும் வினையுமென்றாயிரு வகைய அவ்வந்நிலத்தானமையும் பெயர்ப்பெயரும் அந்நிலத்து மக்களின் தொழிலான் அமையும் வினைப்பெயரும் என்று அவ்விரண்டு கூறுபாட்டினை யுடையவாகும். |
குறிப்பு:- ஈற்றேகாரம் அசைநிலை. பெயரும் வினையும் என்பவற்றுள் உம்மை எண்ணும்மை ‘திணைநிலை’ என்பது ஆகுபெயராய்த் திணைநிலை யினரைக் குறிக்கும். |
நானிலங்களினும் உள்ள மக்கள், அகத்திணைக் குரியராய்ச் செய்யுளிற் கூறப்படுங்கால், முல்லை முதலிய அவ்வத்திணை நிலங்களுக்குரிய இயல் இயைபுடைய பெயர் கொள்ளுதல் ஒன்று; அவ்வாறன்றித் தத்தம் தொழிற்கியைபுடைய பெயர் கொள்ளுதல் ஒன்று. அவ்விரு முறைகளே தமிழகத் தொல்லை மரபொடு அடைவுடையவாகும். தொல்காப்பியர் காலத் தமிழுலகில் தமிழரிடைப் பிறப்பளவில் என்று உயர்வு தாழ்வுடன் வேறுபாடு உடைய சாதி வகுப்புகள் கிடையா. அதனால் அக்காலத் தமிழ்மக்கள் தத்தம் நிலத்துக்கேற்றாங்கு ஆயர், குறவர், உழவர், மறவர் என்றழைக்கப்பட்டார்கள். |