இதில் திணைப்பெயரென்றும், இதற்குமுன்னும் பின்னும் வரும் சூத்திரங்களில் திணை நிலைப்பெயரென்றும் வருவன அகவொழுக்கத்துக்குரிமை கொள்வார் பெயரையே குறிக்கும். அக்காலத் தமிழ் மரபுக்கும், உண்மை யுலகியல் வழக்குக்கு மேற்பத் தமிழ் மக்களெல்லாம் அகத்திணைத் துறைகளில் காதற்றலை மக்களாதற்குரியர் என்பதை இந்நூலார் இங்குப் பல சூத்திரங்களாற் தெளிக்கின்றார். நாடாட்சிக்குரியரே அகத்திணைக்கிளவித் தலை மக்கள் ஆவதற்குரியர் போலவும், அல்லாத நானில மக்களும் வினைவலர் அடியார் முதலாயினாரும் அதன்பினைந்திணைத்துறைகளில் கிளவித் தலைவர் ஆகார் போலவும், பொருள் படுமாறு இச்சூத்திரங்களுக்குப் பிறர் கூறுமுறை பொருந்தாது. ‘தலை மக்கள்’ என்பது ஈண்டு அகத்திணைக் கிளவித் தலைமக்களையே குறிக்கும்; நாடாட்சித் தலைமை குறிப்பது ஈண்டைக்கு வேண்டப்படா. |
பரத்தி ஒருத்தி, “நியமமூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் மகனின்” மெய்க்காதலை யிகழ்ந்து, யாம் “புலவுநாறுதும், செலநின்றீமோ; (கடலின்) பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ? அன்றே” என மறுப்பவள் தமக்கேற்ற தலைவர் தம்மினத்தவருள்ளுமுளர் என தெளித்து, “எம்மனோரிற் செம்மலுமுடைத்தே” (நற்-45) என விளக்கும் தருக்குரை தமிழர் எவரேனும் அகத்துறையிற் றலை மக்களுரிமையனைத்துமுடையர் என்னுமுண்மையை வலியுறுத்துதல் காண்க. இன்னும் இதுபற்றி மேற்சூத்திர உரையிற் காட்டிய பாட்டுகளுடன் பின்வரும் பண்டைச் சான்றோர் செய்யுளடிகளாலும் தமிழரிடை நிலம், தொழில், நிலை, பிறப்பு வகைகளால் அகத்திணைக்குரிமை |