vii |
கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்ப முறுவதோர் பொருள் என விளக்குகிறார். மேலும் இவ்வாறன்றி எல்லாராலும் ஒருங்கு துய்த்து உணரப்படுவதும், இவ்வாறு இருந்ததெனப் பிறருக்குக் கூறப்படுவதுமாகிய பொருளைப் புறம் என்றும் கூறுகிறார்’’. (இ.நூ.பக்.12). |
தொல்காப்பிய அகத்திணையைத் தொடர்ந்து, தமிழ் நெறி விளக்கம், வீரசோழியம், களவியல் காரிகை, நம்பியகப்பொருள், மாறனகப்பொருள், முத்துவீரியம் போன்றன அகத்திணைச் செய்திகளைத் தருகின்றன. |
அகத்திணை தொடர்பான இலக்கண நூல்களில் மூன்று வகையான முறைமைகள் காணப்படுகின்றன. அவை கூற்று முறை, நிகழ்ச்சி முறை, துறைமுறை என்பனவாம். கூற்று முறைக்குத் தொல்காப்பியத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். நிகழ்ச்சி முறைக்கு நம்பியகப் பொருளை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். துறை முறைக்கு வீர சோழியத்தைக் கொள்ளலாம். |
பொருளதிகாரத்தின் பகுப்பில் அதிகமான இயல்களைக் கொண்டது அகப்பொருள், பொருளதிகாரத்தின் முதல் இயலாகவும் அகத்தொடர்பான செய்திகளை நன்கு உணர்ந்து கொள்ள உதவும் அடிப்படையாகவும் அகத்திணை அமைகிறது. |
அகம் |
அகம் என்பது ஒத்த பண்பு கொண்ட ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கொள்ளும் அன்பு முறையாகும். அது புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது. அது தனித்த ஒருவருக்கு என்று சுட்டிக் கூறாத் தன்மை கொண்டது. உலக மக்கள் யாவர்க்கும் பொதுவானது (57).* |
அகத்திணை ஏழு திணைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை: கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என்பனவாம் (1). |
* எண். அகத்திணையியல் நூற்பா எண். |