பக்கம் எண் :

196தொல்காப்பியம் - உரைவளம்

பாரதியார்
  

24. ஏனோர்.................பெயரே
  

கருத்து:-  இது,   மேற்சூத்திரத்திற்  கூறிய  முல்லை  நிலம்  ஒழியப்  பிறநில  மக்களின் திணைநிலைப்
பெயர்களும் அவ்வாறே யமையும் என்பது கூறுகின்றது.
  

பொருள்:-  எண்ணுங்காலை  -  ஆராயும்   பொழுது;  ஏனோர்  மருங்கினும்  -  (மேற்கூறிய  ஆயர்
வேட்டுவ  ரென்னும்  முல்லை  நில  மக்கள் தவிரப்) பிறநில மக்கள் பாலும்; திணை நிலைப் பெயர் ஆனா
வகைய - அவர்க்குரிய அகத்திணைக்குரிய பெயர்கள் சுருங்கக் கூறியமையாப் பல திறப்பட்டனவாகும்.
  

குறிப்பு:-  ஈற்றேகாரம்   அசை.  ஏனோர்மருங்கினும்  என்பதிலும்மை  முன்  ஆயர்  வேட்டுவரொப்ப
அவரல்லாப் பிறநில மக்களிடத்தும் என்னும் பொருட்டாதலால், எச்சவும்மையாகும்.
  

நிலம்   பற்றியும்    தொழில்  பற்றியும்  தமிழ்மக்கள்  கொள்ளும்  பெயர்  பலவாதலானும்,  அவ்வாறு
வேறுபடும்     பெயர்க்குரியார்    யாவரும்    அகப்பகுதியில்    எல்லாத்   திணைகளிலும்   கிழவராதற்
குரியராதலானும்,   திணைக்குரிய   அன்னோர்   பெயர்கள்   கூறியமையா ஆதலின் ‘ஆனாவகைய திணை
நிலைப்பெயர், என்று இங்குக் கூறப்பட்டது.
  

இப்பெயர்   வகைகளைப்   “பெயரும்  வினையு”   மென்னும் முன் சூத்திரத்தின் கீழ் நச்சினார்க்கினியர்
கூறுமுரைக் குறிப்புக்களா னோராங்கறிக.
  

மேற்சூத்திரத்தில்     முல்லை    நில    மக்கள்    தலைமக்களாதல்    கூறப்பட்டது.   அந்நிலத்துப்
பெயர்ப்பெயருடைய   ஆயரும்   வினைப்   பெயருடைய  வேடரும்  தலைமக்களாய குறிப்புடைய பழைய
பாட்டுக்களுமாங்கே    காட்டினோம்,   இனி,   முல்லையொழிந்த  மற்றைய  மூன்று நிலமக்களு மவ்வாறே
காதற்றலை மக்களாவர் என இச்சூத்திரம் கூறுதலால், அதற்குச் செய்யுள் வருமாறு.