அத்திறத்தார்க்குரிய அகவொழுக்கங்களாமெனவும், கூறுவாராயினார் அவர் கூற்றுகள் சூத்திரச் சொற்றொடர்களுக்கு அமையாமையோடு முன்னுக்குப்பின் அவ்வுரையாளர் கூறுவனவற்றிற்கே மாறாக முரணுவதாலும், அவை பொருளன்மையறிக. இளம்பூரணர் இச்சூத்திரத்தின் கீழ், “இது, நடுவணைந்திணைக்குரிய தலைமக்களை (முன்) கூறி, அதன் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை யுணர்த்துதல் நுதலிற்று” என்று குறிக்கின்றார். அன்பினைந் திணையான ஒத்தகாமம் மேற்கூறிய நானிலமக்களுக்கு மட்டும் அமையுமன்றி, இச்சூத்திரங்கூறும் அடியோர் வினைவலர்களுக்கு என்றும் இன்றென்பதே இளம்பூரணர் கருத்தென்பது ஈண்டவர் கூறுங்குறிப்பால் அறிகின்றோம். மேன்மக்களே என்றும் அன்பினைந்திணைக் குரியர், மற்றையோர் இழிதகவுடைய கைக்கிளை பெருந்திணைகளுக்கே உரியராவர் என்பதிவர் கருத்தாமேல் முன்முதற்சூத்திர உரையில், பிரமமுதல் தெய்வ மீறாக நான்கு மணமும் மேன்மக்கள் மாட்டு நிகழ்தலானும், இவை உலகினுள் பெருவழக்கெனப் பயின்று வருதலானும், அது பெருந்திணையெனக் கூறப்பட்டது.” என்றிவரே கூறுதல் முரணாகும். ஆனால் பெருந்திணை பெருவழக்கிற் றென்பதும், ஆண்டவர் கூறிப்போந்தார் அன்றியும், ‘ஏவன் மரபின்’ என்னும் அடுத்த சூத்திரத்தின் கீழ் “ஏவுதன் மரபையுடைய ஏனையோரும் கைக்கிளை பெருந்திணைக்குரியர்” என்றிவரே கூறுகின்றார் எனவே, இச்சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் இவ்வுரையாசிரியர் கைக்கிளை பெருந்திணைகளுக்கு மேன்மக்கள் பெரும்பாலும் தலைமக்களாதற்குரியர் என்று தம் கருத்தை வலியுறுத்துபவர், இச்சூத்திரத்தின் கீழ் அதற்கு மாறாகக் கீழ்மக்களே கைக்கிளை பெருந்திணைகளுக் குரியர் என்று கூறுவது மாறுகொளக் கூறலென்னுங் குற்றத்திற்கவரை யாளாக்குகிறது. |
இவ்வாறே, நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்குப்பொருள் கூறுவதும் பொருந்தாது. கைக்கிளை பெருந்திணைகளை ஆசிரியர் இவ்வியலின் இறுதியில் 50, 51-ஆம் சூத்திரங்களாக நிறுத்தி, அவற்றிற்கு முன்னெல்லாம் இச்சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் அன்பினைந்திணைப் பகுதிகளையே கூறிச் செல்வதால் இதில் அவர் கருத்து வேறுபாடு சுட்டப் பெறாத நிலையில் ஐந்திணைகளுக்கு வேறான கைக்கிளை பெருந்திணைகளை அவர் கூறுவதாகப் பொருள் காண முயல்வது அமைவுடையதா |