செய்தபுலனெறி வழக்கினை 3யுணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமற் செம்மை நெறியால் துறைபோவராதலின். இப்பொருளை எட்டுவகையான் ஆராய்ந்தாரென்ப; அவை அகத்திணை புறத்திணை என இரண்டு திணை வகுத்து, அதன் கட் கைக்கிளை முதற் பெருந்திணையிறுவா யேழும். வெட்சி முதற் பாடாண்டினை யிறுவா யேழுமாகப் பதினான்கு பால் வகுத்து, ஆசிரியம் வஞ்சி வெண்பா கலிபரிபாடல் மருட்பாவென அறுவகைப் செய்யுள் வகுத்து, முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தலென நால்வகை நிலன் இயற்றி, சிறுபொழு தாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் 4புறத்திணை வழுவேழு 5மெனப் பதினான்கு வழுவமைத்து, நாடக வழக்கும் உலகியல் வழக்குமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின். எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்போர், முதல் கரு உரியும் திணைதொறு மரீஇய பெயரும், 6திணை நிலைப் பெயரும், 7இருவகைக் கைகோள்ளும் 8பன்னிரு வகைக் கூற்றும், 9பத்து வகைக் கேட்போடும், 10எட்டுவகை மெய்ப்பாடும், 11நால்வகை உவமமும, 12ஐவகை மரபும் 13என்பர்.
3. புலனெறி வழக்கு - செய்யுள் வழக்கு. 4. அகத்திணை வழு ஏழு.... 5. புறத்திணை வழு ஏழு- 6. திணைதொறும் மரீஇய பெயர்-குறிஞ்சி முதலிய நில மக்களின் பெயர் - வேட்டுவர் குறவர் போலும் பெயர்கள். 7. திணை நிலைப்பெயர்-நிலத்தலைமக்கள் பெயர்-வெற்பன் போலும் பெயர்கள். 8. களவு’ கற்பு என்பன. 9. தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி, பார்ப்பான், பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் கூறும் கூற்றுகள். 10. கூற்றுக்குரியோருள் தலைவன் தலைவி ஒழிந்தவர்கள். 11. மெய்ப்பாடுஎட்டு : நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை. 12. வினை, பயன், மெய், உரு என்பன வற்றால் வரும் உவமங்கள். 13. ஐவகைமரபு; சொல்மரபு, செய்யுள்மரபு, பொருள்மரபு, உலகியல்மரபு, நூல்மரபு. |