ஏவன் மரபு என்பது, குற்றேவற்றொழில் புரிவார் சிறிய நிலைகுறிக்குமல்லால், பிறரை ஏதும் பெருவாழ்வுரிமை குறியாது; ஏவுதல் மரபென்னாது ஆசிரியர் ஏவன் மரபு என்றாராதலின் ஏவலர் ஆட்பட்ட அடியார் வேறு; அடிமைப்படாமல் ஒருவரையடுத்து அவர்க்கே குற்றவேல் செய்து வாழும் ஏவலர் வேறு; ஒருவரையு மடையாமல் நாள்தோறும் வேண்டுவோர்க்கு அவரேவிய செய்து வாழ்வாராய ஏனையோர் வேறு. இம்மூவருள் அடங்காராய்க் கம்மியர் போன்ற ஏவலரல்லாத் தொழிலாளரான வினைவலர் வேறு. ஆதலின் இந்நால்வரையும் முறையே ஆசிரியர் இச்சூத்திரங்களில் நானில மக்கள் போலவே அகவொழுக்கத்திற் குரிமையுடைய ரென்று விதந்து கூறினார். |
“அறப்பரிசாரமும்....................உரிமைச் சுற்றமோ டொருதனிப் புணர்க்க” எனுமனையறம் படுத்த காதையடிகள் தமிழ்த்தனிக்குடி மக்களின் கீழ் ஏவலரும் அடிமைத் திரளும் வெவ்வேறாதலை விளக்குகிறது. பரிகாரம், ஏவற்றொழில்; ஈண்டது புரிபவருக்கு ஆகுபெயர். உரிமைச் சுற்றம், அடிமைத்திரள் என்றே சிலப்பதிகார உரைகாரரிருவரும் கூறுதலறிக. “குற்றிளையோரும் அடியோர் பாங்கும்” எனும் கொலைக்களக் காதையடிகளும் பெருங்குடி தோறும் குற்றேவல் புரிவோரும் அடிமைகளும் உண்மையை உறுதிப்படுத்துகிறது. இனி, இந்திரவிழவூரெடுத்த காதையில் “தொழில் பலபெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழுமாக்களும்;...........சிறுகுறுங் கைவினைப் பிறர் வினையாளரொடு” எனவருமடிகளில் உயர்குடிமக்களின் ஏவலரல்லா “வினைவலரும்” பிறர்தம் ஏவலை மரபாகக்கொண்ட ஏனோரும் பழந்தமிழகத் துண்மை கூறுகிறது. பின் கட்டுரை காதையில் - “ஏவலிளைஞர் காவலற் றொழுது” எனவருதலால், “ஏவல் மரபு”, பிறரை ஏவும் பெற்றி குறியாது, பிறரேவலைத் தாம்புரியு நிலையையே குறிப்பது தெளிவாகும். இப்பழந்தமிழ்த் தொடர் நிலைச் செய்யுளடிகள், தொல்காப்பியர் சுட்டிய “அடியார், வினைவலர், தனிக்குடி ஏவலர், ஏனைய ஏவன் மரபினர், எனும் கீழோர் நால்வரும் தமிழகத் துண்மையை வலியுறுத்தல் கருதற்குரியது. |