இளம்பூரணர் |
28. அவற்றுள்............................மேன |
இது மேற்கூறப்பட்டவற்றுள் ஓதற்கும் தூது போதற்கும் உரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) அவற்றுள் - மேற்கூறப்பட்டவற்றுள், ஓதலும் தூதும்-ஓதல் காரணமாகப் பிரியும் பிரிவும், தூதாகிப் பிரியும் பிரிவும் உயர்ந்தோர்மேன - நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும் அரசர்க்கும் உரிய. |
இவர் ஒழுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும் ஏனையரினும் உயர்புடையராதலின் “உயர்ந்தோர்‘ என்றார். அரசர்தாம் தூதாகியவாறு வாசுதேவனால்1 உணர்க. |
“வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லுச் சிலவே யதற்கே. ஏணியுஞ் சீப்பும் மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனனே.” |
(புறம்-305) |
இதனுள் பார்ப்பார் தூதாகியவாறு கண்டுகொள்க. |
26. நச்சினார்க்கினியர் |
இது முற்கூறியவற்றுள் அந்தணர் முதலிய மூவர்க்கும் இரண்டு பிரிவு உரித்தென்கிறது. |
(இ-ள்) அவற்றுள் - அம்மூன்றனுள்; ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன - ஓதற் பிரிவும் தூதிற் பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன2 என்றவாறு. |
1. வசுதேவன் மகன் வாசுதேவன் - கண்ணன் 2. இளம்பூரணர் உயர்ந்தோராவார் அந்தணர் அரசர் என்ன இவர் வணிகரையும் சேர்த்தார். |