குறிப்பு:- தானே என்பதன் ஏகாரம் பிரிநிலை; வந்த பகையை யடர்க்கத் தான் ஏவுதற்குரிய படைஞர் பிறரை நீக்கி வேந்தன் தானே சேறல் என்பதைச் சுட்டும். ஈற்றேகாரம் அசை. நாட்டின் பகைவராய் வந்தாரை நலிவது வேந்தனுக்கே கடமையும் உரிமையும் ஆகும் மற்றையோர் மன்னராணையின்றித் தாமே பகைமை பாராட்டிப் பொருதல் அரசனால் ஒறுக்கப்படும் குற்றமாகும். அதனால் தன்கடனாற்ற, மண்ணசையால் வந்த வேந்தனை அஞ்ச எதிர்சென்று பொருதழிக்க அந்நாட்டு வேந்தன் தானே செல்வதும், தன் படைநரை ஏவி அவரைக் கொண்டு அக்கடனாற்றிப் பகையழித்தலும், அவ்வேந்தன் மேலனவாவது வெளிப்படை. நெடுஞ்செழியன் வந்த பகைவர் மேற்சென்று தலையாலங்கானத்துப் பொருதழித்தது வேந்தன் தானே சேறற்குக் காட்டாகும். கருணாகரத் தொண்டைமான் படையொடு சென்று கலிங்கமழித்தது அரசனொடு சிவணிய ஏனோர் சேறற்கு எடுத்துக் காட்டாம். |