பக்கம் எண் :

242தொல்காப்பியம் - உரைவளம்

(இ-ள்)  மன்னர் பாங்கின்-மன்னர்க்குரிய பக்கத்திற்கு பின்னோர் ஆகுப - அவ்வாறு முறை செய்தற்கு
அரசன்தான்  சேறல்  வேண்டாமையின்,  அதற்குரியராய்    அவனது  ஏவல்  வழி  வரும்)  வணிகரும்
வேளாளரும் உரியர் ஆகுப.
  

மன்னர்க்குரிய பக்கமாவது காவல்; அஃதாவது,  நெறியின்  ஒழுகாதாரை  நெறியின் ஒழுகப் பண்ணுதல்.
  

32. மன்னர் .... .... ... ஆகுப
  

நச்சினார்க்கினியர்
  

இஃது இறுதிநின்ற வேளாளர்க்கு இன்னுமோர் பிரிவு விகற்பங் கூறுகின்றது.
  

(இ-ள்)     மன்னர் பாங்கின்- அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தராகி நிற்றல்  காரணமாக; பின்னோர்
ஆகுப  -  பின்னோரெனப்பட்ட  வேளாளர்  வரையறையின்றி  வேந்தன்  ஏவிய   திறமெல்லாவற்றினும்
பிரிதற்கு ஆக்கமுடையராகுப என்றவாறு.
  

மன்னர்     பின்னோரென்ற  பன்மையான்    முடியுடையோரும்    முடியில்லாதோரும்,   உழுவித்து
உண்போரும்,  உழுது.  உண்போருமென  மன்னரும்,  வேளாளரும் பலரென்றார்.   ‘வேளாண்மாந்தர்க்கு’
‘வேந்துவிடுதொழிலில்’  என்னும்  மரபிற்  சூத்திரங்களான்  வேளாளர்   இருவகையரென்ப  அரசரேவுந்
திறமாவன  பகைவர்மேலும்  நாடு  காத்தான்  மேலுஞ்  சந்து  செய்வித்தன் மேலும்   பொருள்வருவாய்
மேலுமாம்.
  

அவருள்     உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டதி  தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும்
அழுந்தூரும்  நாங்கூரும்  நாவூரும்  ஆலஞ்சேரியும்  பெருஞ்சிக்கலும்    வல்லமுங்  கிழாரும்  முதலிய
பதியிற்றோன்றி   வேளெனவும்  அரசெனவும்  உரிமையெய்தினோரும்,    பாண்டிநாட்டுக்  காவிதிப்பட்ட
மெய்தினோருங், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை  வேந்தர்க்கு  மக்கட் கொடைக்கு
உரிய வேளாளராகும். “இருங்கோ வேண்மானருங்கடிப் பிடவூர்” எனவுஞ் சான்றோர் செய்யுட்   செய்தார்.
உருவப்பஃறேர்   இளஞ்சேட்சென்னி   அழுந்தூர்   வேளிடை   மகட்கோடலும்    அவன்   மகனாகிய
கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங் கூறுவார்.