நச்சினார்க்கினியர் |
34. “வேந்துவினை..............................உடைத்தே” |
இது மலய மாதவன்1 நிலங்கடந்த நெடுமுடியண்ண2 லுழை நரபதியருடன்3 கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன்றொழில் உரித்தென்கிறது. |
(இ-ள்) வேந்து வினை இயற்கை - முடியுடை வேந்தர்க்குரிய தொழிலாகி இலக்கணங்கள்4, வேந்தனின் ஓரீஇய ஏனோர் மருங்கினும் எய்துஇடன் உடைத்து - அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது என்றவாறு. |
அவர்க்குரிய இலக்கணமாவன, தன் பகைவயிற் றானே சேறலுந் தான் திறைபெற்ற நாடுகாக்கப் பிரிதலும் மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம். |
உதாரணம்: |
“விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர் வேறுபன் மொழிப தேஎ முன்னி விண்நசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு புண்மா ணெஃகம் வலவயி னேந்திச் செலன் மான் புற்ற”. |
(அகம் 215) |
என்புழி வேறு பன்மொழிய தேஎந்தைக் கொள்ளக் கருதிப் போர்த்தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க நெஞ்ச மென்றலின், இது குறுநில மன்னன் தன் பகைவயின் நாடு கொள்ளச் சென்றதாம்; வேந்தனெனப் பெயர் கூறாமையின். “பசைபடு பச்சை நெய்தோய்த்து” என்றலிற்றானே குறுநில மன்னன் சென்றதாம். ஏனை வந்துழிக் காண்க. (32) |
1. அகத்தியன் 2. கண்ணன் 3. நரபதி-அரசர் 4. இயற்கை என்பதை இலக்கணங்கள் என்றார். |