இனி, ஆரியர் செய்யுள் அனைத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றுள் ஒன்றும் பலவும் பொருளாகக் கொண்டே அமைதல் வேண்டுமென்பர் தமிழ்ப் புலவர். மக்கள் பொருளாக மதிப்பன எல்லாம் செய்யுளுக்குரியவாகும் எனக் கொள்வர். அப்பொருளெல்லாம் மக்கள் வாழ்வொடு படுவவாகலானும், மக்கள் வாழ்வும் அகமும் புறமுமென இரண்டிலடங்குவதாகலானும், பொருளை அகமும் புறமுமென இரு கூறாய் வகுத்துக் கூறுவதே தமிழ் மரபாகும். அம்மரபு மேற்கொண்டு தொல்காப்பியரும் தமிழ்ச் செய்யுட் பொருளை அகப்பொருளும் புறப்பொருளுமாக இரு கூறாக்கி, அவற்றின் பொது இயல்புகள் அல்லது இலக்கணங்களைத் தம் நூலின் பொருட்படலத்தின் முதற்கண் அகத்திணையியல் - புறத்திணையியல் என முறையே வகுத்தமைத்துப், பிறகு அவற்றுள் அகத்தின் சிறப்பியல்புகளைக் களவியல் கற்பியல் பொருளியல்களில் விளக்கி. அவற்றின் பிறகே அப்பொருள்களை அறியக் கூறும் கருவியாகிய செய்யுளியல்புகளை மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் என மூன்று பகுதிகளிற் கூறி இறுதியில் செய்யுள் செய்வார் தமிழ் மரபு பிறழாமற் காத்தற்கு வேண்டியனவற்றை மரபியலில் தொகுத்து விளக்கிப் போந்தார். |
இதில் முதற்கண்ணதாய இவ்வகத்திணையியல் மக்களின் அகவொழுக்கம் அல்லது காதலற வழக்குகளின் பொதுவிலக்கணம் கூறுகிறது. அகமாவது, காதலர் உளக்கிடையும், அவர் காதல் கதிர்த்து வினைப்பட்டு அன்னோர் மனையற வாழ்க்கையிற்றொடர் புறுவதுமாகும். திணையாவது ஒழுக்கம். ஆகவே அகத்திணை என்பது காதல் கண்ணிய ஒழுகலாறாம். அவ்வொழுக்கப் பொதுவியல்புகள் கூறும் பகுதி அகத்திணையிலெனப் பெயர் பெற்றது. (அதுவேபோல் புறத்திணையென்பது அக வாழ்க்கைப் புறமான மக்களின் சமுதாயத் தொடர்புடைய ஒழுக்கமாகும். அது பற்றிக் கூறுமிலக்கணப்பகுதி புறத்திணையியலெனப்படும்) திணைச்சொல் முதலில் ஒழுக்கத்துக்கு இயற்பெயர். குறிஞ்சி முதலிய திணைப் பெயர்களும் நிரலே புணர்வு முதலிய ஒழுக்கப் பொருட்டாம். அவை அவ்வத்திணைக்குரிய. |