கோடுயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட ஒள்ளெரி மருங்கறிந்து ஒய்ய ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியா மையே அழிபடர் அகல வருவர் மன்னால் தோழி தண்பணைப் பொருபுனல் வைப்பின் நம்மூர் ஆங்கண் கருவிளை முரணிய தண்புதல் பகன்றைப் பெருவளம் மலர அல்லி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க அறன்இன் றலைக்கும் ஆனாவாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசித் திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய நிரைவளை ஊருந் தோளென உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.” |
(அகம் -255) |
எனவரும், காலிற் பிரிவுக்கு உதாரணம் வந்துழிக் காண்க. |
நச்சினார்க்கினியம் |
37. முந்நீர்.....................இல்லை |
இது முற்கூறிய ஓதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்தனுட் பகையுங் காவலும் ஒழிந்தவற்றுக்கு ஓரிலக்கணங்கூறுகின்றது. |
(இ-ள்) ஓதலுந் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மை யாற்செல்லுஞ் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று என்றவாறு. தலைவியை உடன்கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும் ஒழிந்த சான்றோர் செய்யுட்களுள்ளுங் காண்க. இதுவே ஆசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியோடு கூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க. |
இனித், தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன் கொண்டு சென்மினெனக் கூறுவனவுந் தோழி கூறுவனவுஞ் செலவழுங்குவித்தற்குக் கூறுவனவென்று உணர்க. அக்கூற்றுத் தலைவன் மரபு அன்றென்று மறுப்பன ‘மரபுநிலை திரியா’ என்பதனுள் அமைந்தது. |