பக்கம் எண் :

254தொல்காப்பியம் - உரைவளம்

இனி,     இச்சூத்திரத்திற்குப், ‘பொருள்வயிற் பிரிவின்கட்    கலத்திற்பிரிவு தலைவியுடன் சேரவில்லை;
எனவே,  காலிற்பிரிவு  தலைவியுடன்  சேறல்  உண்டு’ என்று   பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த
புலனெறி  வழக்கம்  இன்மை  உணர்க.  இனி,  உடன் கொண்டு   போகுழிக் கலத்திற் பிரிவின்று; காலிற்
பிரிவே யுளதென்பாரும் உளர்.
  

பாரதியார்
  

37. முந்நீர்...................இல்லை
  

கருத்து:- இது, பெண்டிரொடு கடல் கடத்தல் தமிழ் மரபன்று என்று கூறுகின்றது.
  

பொருள:- மகடூ உவோடு முந்நீர் வழக்கம் இல்லை-பெண்ணோடு கடலேறிச் செல்லுதல் மரபன்று.
  

குறிப்பு:-  வழக்கம் என்பது செல்லுதற் பொருட்டாதல்  “ஆள் வழக்கற்ற சுரத்திடை” (அகம் 51) என்ற
பெருந்தேவனார்    அகப்பாட்டடியானும்,      ‘யாவரும்    வழங்குநரின்மையின்’   என்னும்   மாமூலர்
அகப்பாட்டடியானும்,  “மான்றமாலை  வழங்குநர்ச்    செரீஇய,   புலிபார்த்துறையும்  புல்லதர்ச் சிறுநெறி”
என்னும் பூதனார் நற்றிணைப் பாட்டடியானும். ‘வளிவழங்கும்’ என்னும் குறளடியானுமறிக.
  

இனி,    ‘முந்நீர்’ என்பது கடலுக்கு இயற்பெயராதல் வெளிப்படையாகவும், அச்செம் பொருளை விட்டு,
மூன்று  நீர்மையாற் செல்லுஞ் செலவு என்று பொருள் கூறும் நச்சினார்க்கினியர் உரை   எவ்வகையானும்
பொருந்துவதன்று.  அவர்  கூறுமாறு  ஓதல்,  தூது,  பொருள் காரணமாக மட்டும் தலைவன் தலைவியை
உடன் கொண்டு செல்லுதல் கடியப்படுமெனின் மற்றும்   பகை காவல் முதலியவற்றில் தலைவியோடு கூடச்
சேறல்  உண்டு  எனக்  கொள்ளல் வேண்டும். ஓதல்  தூது பொருள் பற்றித் தலைவியை உடன் கொண்டு
செல்லுதலினும்,  பகை  பிறநாடு  காவல்  பற்றிய    செலவுகளில் அவளைக்கொண்டு செல்லுதலால் வரும்
ஏதம்  பெரிதாகலானும், பின்கற்பியலில் “எண்ணரும்   பாசறைப் பெண்ணோடும் புணரார்” என  பகையில்
பெண்ணோடு         சேறல்      கடியப்படுதலானும்,       அவ்வாறு    போர்        காவல்களில்