வொழுக்க மரபுகளுக்குப் பல திறப்பட்ட தமிழ் மக்களின் உரிமை விளக்கப்பட்டது. 25 முதல் 33 வரையுள்ள சூத்திரங்களில் அகவொழுக்கங்களிற் பெருவரவிற்றாய பாலை, பிரிவின் நோக்கம் பற்றி அறுதிறப்பட்டு ஒவ்வொரு வகையும் வெவ்வேறு வகுப்பினருக்குச் சிறந்து பொருந்துமியைபுடன் விளக்கப்பட்டது. 34-ஆம் சூத்திரத்தில் கடற்செலவும், 35-ஆம் சூத்திரத்தில் மடற்றிறமும் மடவார்க்குக் கடியப்படுந் தமிழ் மரபு காட்டப்படுகிறது. 36 முதல் 42 வரையுள்ள சூத்திரங்களில் தாயர், தோழி, கண்டோர், தலைவன் மற்றையோர்களுக்கு அகத்துறையில் கூற்று நிகழ்தற்கேற்ற இடங்கள் கூறப்பட்டன 43, 44-ஆம் சூத்திரங்கள் முன் 15, 16-இல் கூறிய பெருவரவான உரி ஒழுக்கம் போல் ஐந்திணை யிலக்கணத் திலடங்காது, சிறுவரவிற்றாய் உரிப் பொருட்டுறைகளாகு மிரண்டைச் சுட்டுகின்றன. 45-ஆம் சூத்திரம் உரிப்பொருட் புறனடையாய், முன்சுட்டிய வற்றுளடங்காது உரிப்பொருளாதற்குப் பொருந்திய பிற்பல மரபு முரணாவாறு வருவனவுமுளவெனக் கூறுகின்றது. 46 முதல் 49 வரையுள்ள சூத்திரங்கள் அகத்துறைகளுள் உள்ளுறையும் பிறவுமாய உவமங்கள் பயிலுமாறு கூறுகின்றன 50-ஆம் சூத்திரம் கைக்கிளை இயலையும், 51-ஆம் சூத்திரம் பெருந்திணையியல் வகைகளையும் நிரலே விளக்குகின்றன. இவற்றுள் பின்னைய பெருந்திணையை விலக்கி, முன்னதான கைக்கிளைக்கும் அன்பினைந் திணைகளுக்கும் பொருந்திவருவனவாய் முன்னே சுட்டப்பட்ட (1) நிகழ்ந்தது நினைத்தல், (2) நிகழ்ந்தது கூறி நிலையல், (3) மரபுதிரியாப் பிற உரிப்பொருள்கள் விரவல், (4) உள்ளுறை திணையுணர் வகையாதல் என்னும் நான்கும் வந்து பயிலுமென 52-ஆம் சூத்திரம் கூறுகின்றது. 53-ஆம் சூத்திரத்தில் இயற்பா வகைகளுள் கலியும் பரிபாடலுமே அகப்பொருட்குச் சிறந்துரியாமென்பது சுட்டப்படுகிறது. ஈற்றிலுள்ள சூத்திரமிரண்டும் அகத்துறையில் தலைமக்கள் கூற்றுக்களில் இயற்பெயர் சுட்டுவது மரபன்றெனக் கூறுகின்றன. |