அகற்சிசேய்மையில் நீங்குதல் தலைவியின் பிரிவு அயல் மனையிடத்தாயினும் தாயர்க்குச் சேய்மைப் பிரிவாகவே உணரப்படும் ஆதலின் அகற்சி மேற்றே என்றார். |
காதலர் தலைவி மனைக்கு அயல்மனைக்கண் பிரிந்தாராயினும் பிரிவின்மேலதே என்றும் பொருள் கொள்ளலாம். எனினும் இது சிறவாது; உடன்போக்கு இரவில் தொடங்குவது ஆதலின் ஊரலர் எழுந்த நிலையில் காதலர் அயல்மனையில் இருந்தார் என்றல் பொருந்தாது. தலைவி மனைக்கண் இல்லையெனின் தாயர் அயல் மனையில் (அக்கம்பக்கத்தில்) தேடுதலை முதலிற் கொள்வரேயன்றிச் சேரியிலும் சுரத்திலும் தேடுதல் இல்லை. அதனால் அயலோர் என்பதற்கு அயல்மனையில் தேடும் தாயர் என்பதே சிறக்கும். |
பாரதியார் அயலோர் என்பதற்குத் தமர் ஏவலர் எனக் கொண்டும் அகற்சி என்பதற்குச் சேய்மைச்சுரம் எனக்கொண்டு “தமர் முதலியோர் உடன் போய வரைத் தேடிச் செல்வது சேய்மைச் சுரத்தில் கண்ணது” எனப்பொருளுரைத்தார். ‘அயலோராயின் அகற்சிமேற்றே’ என உம்மையின்றிச்சூத்திரம் அமையின் ஓரளவில் ஏற்புடைத்தாகும் அவர் உணர தமர் முதலானோர் சேய்மைச் சுரத்தில் தேடச் செல்லுமுன் அயல்மனை சேரி ஆகிய இடங்களில் தேடுதல் இல்லை என்பது பொருந்துமோ? அவ்வீரிடங்களிலும் இல்லை என்பதைத் தாயர் கூறிய பின்னரே அவர் சேய்மைச் சுரம் செல்வர் எனின் அதுவரை அவர் வாளா இருந்தனர் என்பதும் பொருந்துமோ? தாயர் அறிவிக்காமல் தாமே தேடி இல்லை என்பது தெரிந்த பின்னரே தமரிடம் கூறுவராதலினாலும் தமரும் தம் காரியமே கண்ணாயிருத்தலின் தாயர் கூறுதற்கு முன் அறியார் ஆதலினாலும் அயலிலும் சேரியிலும் அவர் தேடுதல் இன்றாயிற்று எனின், அயலிலும் சேரியிலும் இல்லை என உணர்ந்த பின்னரே சேய்மைச் சுரத்திடத்தில் தேட முற்படுவர் ஆதலினாலும் அயலிலும் சேரியிலும் இல்லை என்ற உணர்வே பிரிவுக்குரியதாதலினாலும் தமர் முதலியோர் சேய்மைச்சுரம் பிரிவதே பிரிவு எனக் கொண்டு கூறுவது சிறவாது. |
அயலோராயினும் என்னும் உம்மை சேரியும் சுரத்தும் தேடினாராயினும் என்ற இறந்தது தழீஇயது. அயல்மனைக்கண் தேடுதல் பிரிவின் பாற்படுமோ என்ற ஐயம் நீக்கவே தேற்றேகாரம் கொடுத்து அகற்சி மேற்றே என்றார் ஆசிரியர். |