பக்கம் எண் :

292தொல்காப்பியம் - உரைவளம்

நீக்கலின்  வந்த  தம்முறு  விழுமமும்  என்பது.  தமரை  நீக்குதலால்  தமக்குற்ற6 நோயின் கண்ணும்
என்றவாறு.
  

“விளம்பழங் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசந் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளிமுதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியனை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர்என் ஆயத் தோர்என
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத்து அன்றியுங் கலுழ்ந்தன கண்ணே.”
  

(நற்-12)
 

என வரும். இஃது உடன்போக்குத் தவிர்தற்பொருட்டுக் கூறியது7.
 

இன்னும் “நீக்கலின் வந்த தம்முறு விழுமம்” என்றதனால் தலைமகட்குக் கூறினவும் கொள்க.
 

“நாளும் நாளும் ஆள்வினை அமுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழென
ஒண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே”
 

(சிற்றடக்கம்)
 

எனவரும்8.
 

வாய்மையும்     பொய்ம்மையும்  கண்டோற் சுட்டித்தாய்நிலை  நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
என்பதும்,  மெய்ம்மையும்   பொய்ம்மையும்   காணப்பட்ட அவனைச்  சுட்டித்தாய்நிலை  நோக்கி  மீட்டுக்
கொள்ளுதற் கண்ணும் என்றவாறு.  


6 தலைவிக்கும் தனக்கும் உற்ற
  

7 நும்மொடு  வரவு  தான்  அயரவும்  என்றமையால்  உடன் போக்குத்தவிர்தற் பொருட்டுக் கூறியது
என்பது பொருந்தாது. விழுமம் கூறும் அவ்வளவே கொள்ளல் வேண்டும்.
  

8 ஒண்பொருட் ககல்வர் நம் காதலர் எனப்பொருள் வயிற்பிரிவு கூறியது.