பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42293

“பால் மருள் மருப்பின் உரல்புரை பாவடி
ஈர்நறுங் கமழ்கடாஅத்து இனம்பிரி ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து
பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருளில் சொல்லும் நீசொல் லினையே
நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி
நின்னிற் பிரியலேன் அஞ்சல்ஒம் பென்னும்
நன்னர் மொழியும் நீமொழிந் தனையே
அவற்றுள்,
யாவோ வாயின மாஅல் மகனே
கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையும்
அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே.”
  

(கலி-பாலை-20)
 

எனவரும்.9
 

இது   தலைமகனைச்   சுட்டிக்   கூறியது.  தாய்நிலை  நோக்கித்   தலைப்பெயர்த்துக்  கொண்டதற்குச்
செய்யுள் வந்த வழிக் கண்டு கொள்க.
  

‘நோய்    மிகப்  பெருகித்தன்  நெஞ்சு கலுழந்தோளை அழிந்தது களையென மொழிந்ததுகூறி, வன்புறை
நெருங்கி  வந்ததன்   திறத்தொடு, என்றிவை  எல்லாம் இயல்புற  நாடின், ஒன்றித்  தோன்றும் தோழிமேன’
என்பது தலைமகன் பிரிதலால் வந்துற்ற  நோய்  மிகவும்  பெருகித் தன் நெஞ்சு  கலங்கியோளை அழிந்தது
களைதல்   வேண்டுமெனத்  தலைமகன்  சொன்ன   மாற்றத்தைக்கூறி  வன்புறையின் பொருட்டு  நெருங்கி
வந்ததன் திறத்தோடு  இத்தன்மையவெல்லாம்  இயல்புற  ஆராயின்  தலைமகளொடு பொருந்தித் தோன்றும்
தோழிமேலன என்றவாறு.  


9. இச்செய்யுளும் பொருள் வயிற்பிரிவு பற்றியதே.