ஆ. சிவலிங்கனார். |
இச்சூத்திரப் பொருள் கோளாக இளம்பூரணர். |
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் (ஆக) எழுதிணை முற்படக்கிளந்த என்ப” |
எனவும்; |
“முற்படக்கிளந்த எழுதிணை கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்ப” |
எனவும் இருவகையில் கொண்டு கூட்ட, நச்சினார்க்கினியர், இருந்தவாறே கூட்டினர். சோமசுந்தர பாரதியார். |
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்திணை ஏழுஎன்ப” |
எனக் கூட்டினார். |
சூத்திரப் பொருளளவில் யாவரும் ஒத்த கருத்தினரே. |
‘முற்படக்கிளந்த’ என்றதனால் ஆசிரியர் தொல்காப்பியர் இச்சூத்திரத்தின் முன்னர் அகத்திணை ஏழ், புறத்திணை ஏழ் எனக் கூறியிருத்தல் வேண்டும் என்பர். அது பொருந்துவதே எனினும் ஆசிரியர் என்ப என்றது தம் முந்து நூலாரை அந்நூலார், தமக்கு முந்து நூலார் கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் உள்ள ஏழையும் முற்படக் கிளந்தனர் என்பர். எனவே ஆசிரியர்களுக்கு முன்னர் இரண்டு தலைமுறையினர் இச்சூத்திரத்துக் கூறப்பட்டனர் என்க. அதற்கேற்ப இச்சூத்திரப்பொருளாக, “எமக்கு முந்து நூலார்கள் தமக்கு முந்து நூலார்கள், கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் உள்ளவற்றை முற்படக்கிளந்த எழுதிணை என்பர்” எனவுரைப்பது சிறக்கும். |
ஏழ்திணை எனப் பாடம்கொள்ளாமல் எழுதிணை என்றே யாவரும் கொள்ளலின், ‘முற்படக்கிளந்த திணை ஏழென்ப’ எனக்கூட்டுவது பொருந்தாது. ஏழ்திணை என்றிருப்பின் ஏழ் திணை எனவும் ஏழ் என்பஎனவும் கூட்டலாம். ‘எழுஎன்ப’ எனக் கூட்டுதல் புணர்ச்சி விதிப் பொருத்தமற்றதாகும். அதனால் ‘எழுதிணை’ என்பதே தொல்காப்பியர் கருத்தென்னலாம். |