“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை யென்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய ரன்னா ரிருவரைக் காணீரோ பெரும காணே மல்லேங் கண்டனங் கடத்திடை யாணெழி வண்ணலோ டருஞ்சுர முன்னிய மாணிழை மடவர றாயிர்நீர் போறீர்; பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கணையளே; ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; எனவாங்கு, இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடீஅச் சென்றன ளறந்தலை பிரியா வாறுமற் றதுவே” |