வாயினும் கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் என்பது, வாயான் வகுத்த பக்கமோடும் கையான் வகுத்த பக்கமோடும் பயன் கருதிய ஒரு கூற்றானும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. |
வாயான் வகுத்த பக்கமாவது-ஓதுதல். கையான் வகுத்த பக்கமாவது-படைக்கலம் பயிற்றலும் சிற்பங்கற்றலும். ஊதியங் கருதிய ஒரு திறனாவது மேற்சொல்லப்பட்டபொருள், வயிற்பிரிதலன்றி அறத்திறங் காரணமாகப் பிரியும் பிரிவு. இது மறுமைக்கண் பயன் தருதலின் ‘ஊதியம்’ ஆயிற்று. |
“அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லை கேடு.” |
(குறள்-32) |
என்பதனானும் அறிக. |
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் என்பது, பிரிந்ததனான் வரும் புகழும் பிரியாமையான் வரும் குற்றமும் குறித்துத் தலைமகளை யான் வருந்துணையும் ஆற்றியிருத்தல் வேண்டுமெனக் கூறுதற்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. |
பொருள்வயின் ஊக்கிய பாலினும் ஊதியம் கருதிய7 ஒரு திறத்தானும் வற்புறுத்தல் எனக்கூட்டுக. |
“அறனு மீகையு மண்புங் கிளையும் புகழு மின்புந் தருதலிற் புறம்பெயர்ந்து தருவது துணிந்தமை பெரிதே விரிபூங் கோதை விளங்கிழை பொருளே.” |
எனவரும். |
தூதிடை இட்ட வகையினானும் என்பது, இருபெரு வேந்தர் இகலிய வழிச் சந்து செய்தற்குத் தூதாகிச் செல்லும் வகையின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும். |
7 வாயினும் கையினும் வகுத்தபக்கமொடு ஊதியம் கருதிய என்க. |