இதில், முன் தலைவன் செய்ததைத் தோழி கொண்டு கூறியதாகக் காண்கின்றோம். |
“வினையமை பாவையி னியலி நுந்தை மனைவரை யிறந்து வந்தனை யாயிற் றலை கெதிரிய தன்பெய லெழிலி அணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு நீவிளை யாடுக சிறிதே; யானே மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன், பெயர்க்குவென்; நுமர்வரின் மறைகுவென், மாஅ யோளே”. |
எனும் நற்றிணை (362) செய்யுளுமது. இதில் தேடிப்பின்வந்த தலைவி தமர்க்கு ஊறு செய்யாது அருளான் ஒளிக்கும் தலைவன் தானே கூறியதும் அறிக. கற்பொடு புணர்ந்த கௌவைக்குத் தலைவன் கூற்றாகச் செய்யுள்வரின் கண்டுகொள்க. |
இனி, இதில் நாளது சின்மை, தாளாண்பக்கம் இன்மையினிளிவு அன்பினதகலம், எனும் நான்கும் பொருள் தேடத்தூண்டுதலும், அபபொருட்பிணியை முறையே இளமையதருமை, தகுதியதமைதி, உடைமையது (காதல்) உயர்ச்சி, அகற்சிய தருமை எனும் நான்கும் இன்பவிழைவால் தகைப்பதும் கூறப்படுகிறது. |
நாளது சின்மை பொருள்தேட வலித்தலும், அப்பொருட்பிணி தகைக்கும் இன்பநுக ரிளமையுந், தம்முள் ஒன்றாமைக்குச் செய்யுள்: |
“புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச் செல்லினும் செல்லா யாயினும் நல்லதற் குரியை வாழியென் னெஞ்சே; பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியிற் கெடுவ; யானே விழுநீர் வியலகந் தூணி யாக |