பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன நறுந்தண்ணியளே; நன்மாமேனி புனற்புணையன்ன சாயிறைப் பணைத்தோள் மணத்தலும் தணத்தலு மிலமே; பிரியின் வாழ்தல் அதனினு மிலமே.” |
(குறுந்-168) |
“மல்குசுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் குமரி வாகைக்கோலுடை நறுவீ மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும் கான நீளிடைத்தானும் நம்மொ டொன்றுமணம் செய்தன ளிவளெனில் நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.” |
என்ற குறுந்தொகை (347) பாட்டிலும், அன்பினதகலமும் அகற்சிய தருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்குதல் உணர்க. |
இனிஓதற் பிரிவில் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்: |
“பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ? தீங்கதிர் மதியேய்க்கும் திருமுகம், அம்முகம் பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்.” |
என்னும் பாலைக்கலித் (14) தாழிசையில் ‘வாயின்வகுத்த கல்விப் பகுதியின் ஊதியங்கருதிய’ தலைவன் பிரிவருமை காண்க. |
“பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ? புரியவிழ் நறுநீலம் புரையுண்கண் கலுழ்பானாத் திரியுமிழ் நெய்யேபோற் றெண்பனி யுறைக்குங்கால்” |
என்பதால், ‘கையின் வகுத்த கல்விப்பகுதியின் ஊதியங் கருதித்’ தலைவன் பிரிந்தமை அறிக. இப்பிரிவுகளில் தலைவன் கூற்று வந்துழிக் கண்டு கொள்க. |
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தும் தலைவன் கூற்றுக்குச் செய்யுள்: |
“நாளும் நாளும் ஆள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென- |