ஒண்பொருட் ககல்வர்நம் காதலர்; கண்பனி துடையினித் தோழி! நீயே.” |
(சிற்றெட்டகம்) |
“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசை யுடனிருந்தோர்க் கரும்புணர் வினமென வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை - - - - - - - - - - - - - - - - - - மைசூழ் வெற்பின் மலைபல இறந்து செய்பொருட் ககன்றநம் செயிர்தீர் காதலர்” |
(நற்-214) |
எனும் நற்றிணைச் செய்யுளடிகளுமது, இச்செய்யுள் தலைவி கூற்றாயினும், இதில், ‘இன்மென’ என்பதனால் தலைவன் கூறியதைத் தலைவி கொண்டு கூறியது என விளங்குவதால், புகழும் மனமும் தலைவன் எடுத்து வற்புறுத்தியதறிக. |
“மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித்தற்குப் படர்தலுற் றார்நமர்.....................” |
என்னும் மணிவாசகர் கோவைச் செய்யுளில் தோழி கூற்றால் தலைவன் தூதிடையிட்டுப் பிரிதல் கூறப்படுகின்றது. தூது பற்றி பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் காண்க. ‘கொடுமிடனாம்’ எனும் (36) கலியில், தூதொடு மறந்தார் கொல்லோ என்பதனால், தூதின் பொருட்டுப் பிரிதற்கரிய தைலைவியையும் தலைவன் பிரிந்ததறியப்படும். |
முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலியவற்றில் மண்டிலத்தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பலவிடத்தும் வருதல் காண்க. தன் வேந்தனின் பகைவராய தோன்றல் சான்ற மாற்றாரைப் பொருது வெல்லப் பிரியும் தலைவன் கூற்று வருமாறு: |
“பல்லிருங் கூந்தல்! பசப்பு நீவிடின் செல்வேந் தில்ல யாமே, செற்றார் வெல்கொடி அரண முருக்கிய கல்லா யானை வேத்துபகை வெலற்கே.” |
(ஐங்-429) |