பக்கம் எண் :

28தொல்காப்பியம் - உரைவளம்

இளம்     பூரணர்,  நடுவண்  ஐந்திணை என்பதை எழுவாயாகவும் ஒழிய என்பதை வினையெச்சமாவும்
பாத்திய   பண்பு   என்பதைப்   பயனிலையாகவும்    கொண்டார்.   அவரே   நடுவண்  ஐந்திணைக்கும்
படுதிரைவையம்  பாத்திய  பண்பில்  நடுவணது  ஒழிய  எனப்  பிறர் வினை  முடிவு  கொள்வர்  என்றும்
கூறுகிறார்.
  

நச்சினார்க்கினியர்     ஐந்திணை  நடுவணது  ஆகியவற்றை  இரண்டாம் வேற்றுமைத் தொகை எனவும்,
வையம்  என்பதை  நான்காம்  வேற்றுமைத்  தொகை எனவும்,  பாத்திய  என்பதற்கு  (தத்தம்  வருவித்த)
ஆசிரியர்  எனவும்  ஒழிய  என்பதற்கு  வையம்  ஒழிவதாக  என  வையத்தை  எழுவாயாகவும்  கொண்டு
இடர்ப்பட்டார்.
  

பாரதியார் ஐந்திணை பாத்திய பண்பு என இயைப்பார்.
  

பின்வருமாறு பொருள் கொண்டு வினை முடிவு கொள்வதே சிறக்கும்.
  

“முற்கூறப்பட்ட  எழுதிணைகளுள்  கைக்கிளை  பெருந்திணைகளுக்கு  நடுவில்  உள்ள குறிஞ்சி பாலை
முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து ஒழுக்கங்களுக்குப்  படுதிரை  வையமாகிய  நிலத்தை  முன்னோர்
பகுத்துக்  கொடுத்த  முறைமையில்  நடுவண்  ஒழுக்கமாகிய  பாலை  ஒழுக்கம்   தனக்கு  நிலம்  இன்றித்
தவிர்வதாக”.  இப்பொருளில்  நடுவணது  எழுவாய் ஒழிய பயனிலை பிற  நாடுகளில்  தார்ப்  பாலைவனம்
சகாராப்  பாலைவனம்  எனப்  பாலை  நிலங்கள்   இருத்தல்   போலத்   தமிழ்நாட்டில்   இல்லாமையால்
அகவொழுக்கத்துக்கு  நிலம்  வகுத்த  முன்னோர்  பாலைக்குத்  தனி  நிலம்  வகுக்க இல்லை. ஏன் எனின்
இவ்விலக்கணம்  வடவேங்கடம்  தென்குமரி ஆயிடைத் தமிழ்  நல்லுலகத்துக்கே   கூறப்படுவது   ஆதலின்
என்க.  ஆனால்  குறிஞ்சியும்  முல்லையும் முறைமையில் திரிந்து  பாலை  வடிவம்  கொள்ளும்  ஆதலின்
அத்  திரிவு  முதுவேனிற்  காலத்தாதலின்  அத்  திரிந்த  நிலமும்  திரிந்து   நிற்கும்   கால  அளவாகிய
முதுவேனிற் காலமும் பாலைக்கு நிலமாகவும் பொழுதாகவும் வகுத்தனர்.