முன் நிகழ்ந்தது காதலர் பின் நினைப்பிற்கு ஏதுவாதல் அகத்துறையில் இயல்பாம் என்பதை இச்சூத்திரத்தானும் அவ்வாறு நினைத்துக் கூற்று நிகழ்தலும் அகத்துறையின் பாற்பட்டதே என்பதை அடுத்த சூத்திரத்தானும் தொல்காப்பியர் விளக்குகிறார். |
இனி, இச்சூத்திரமும் அடுத்த சூத்திரமும் காதற் கூற்றுக்குப் பொருளாமாயினும், கொண்டு தலைக்கழிதல் காட்சி முதலியன போலப் பெரு வரவின்மையான் அவற்றொடு கூறாது, ஈண்டுக் கூற்று வகை கூறும் சூத்திரங்களொடு இவற்றை இந்நூலார் கூறினாரென்க. |
நிகழ்ந்தது நினைத்தற்குப் பாட்டு வருமாறு: |
“யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ? தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே”. |
(குறுந்-25) |
இது தலைவி நிகழ்ந்தது நினைத்தற்குச்1 செய்யுள். |
இனி, தலைவன் நிகழ்ந்தது நினைத்தற்குச் செய்யுள்: |
“இரண்டறி கள்வி நங்காத லோளே; முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள்; கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே.” |
(குறுந்-312) |
1 நினைந்து தனக்குத்தானே கூறியதற்குச் செய்யுள் என்பது இவர் கருத்துப் போலும். சிறைப்புறமாகத் தலைவன் அது கண்டு தலைவி தோழிக்குக் கூறியதும் ஆம். |