பக்கம் எண் :

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே சூ.47389

பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ்
விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தனன்;
நளாஅவிழ்ந் தன்னஎன் மெல்விரற் போதுகொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன்;
றொய்யி லிளமுலை யினிய தைவந்து
தொய்யலந் தடக்கையின் வீழ்படி யளிக்கு
மையல் யானையின் மருட்டலு மருட்டினன்;
அதனால் அல்லல் களைந்தனன், தோழி!”
 

எனவரும் குறிஞ்சிக்கலி (18) செய்யுளடிகளும் முன்நிகழ்ந்ததைத் தலைவி கூறி நிலையலாகும்.
 

“மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோற்
பொன்கை தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப்
போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை
யின்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய்
நன்னுதா னினக்கொன்று கூறுவாங் கேளினி;
நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து
நுதலு முகனுந் தோளுங் கண்ணு
மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ-
ஐதேய்ந் தன்று பிறையு மன்று,
மைதீர்ந் தன்று மதியு மன்று,
வேயமன் றன்று மலையு மன்று,
பூவமன் றன்று சுனையு மன்று,
மெல்ல வியலு மயிலு மன்று,
சொல்லத் தளருங் கிளியு மன்று,
எனவாங்கு,
அனையன் பலபா ராட்டிப் பையென
வலைவர் போலச் சோர்பத னொற்றிப்
புலையர் போலப் புன்க ணோக்கித்
தொழலுந் தொழுதான் றொடலுந் தொட்டான்
காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன்;
தொழூஉம் தொடூஉ மவன்றன்மை
யேழைத் தன்மையோ வில்லை தோழி.”

(குறிஞ்சிக்கலி-19)
 

என்பதும், தலைவி நிகழ்ந்தது கூறி நிலையற்றுறையே.