“அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள், விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல நிலமிகு சேவடி நிலம்படுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள், கண்ணிய துணரா வளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கும் நிரைநிலை யுதர பரன்முரம் பாகிய பயமில் கான மீறப்ப வெண்ணுதி ராயின் - அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி யன்ன வாக வென்னுநள் போல- முன்னங் காட்டி முகத்தி னுரையா வோவச் செய்தியி னொன்று நினைந் தொற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையன் மோயினள் உயிர்த்த காலை, மாமலர் மணியுரு விழந்த வணியழி தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே; யொண்டொடி- உழைய மாகவும் இனைவோள்- பிழையலண் மாதோ பிரிதுநா மெனினே.” |