இதனுள் வைகறைக்காலத்து மனைவயிற் செல்லாது, இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி, அதனானும் அமையாது, பின்னும் அவரைப் புணர்தற்குச்சூழ்ந்து திரிகின்ற இவ்வூரிடத்தே நின்னைப் பெறாது, சுற்றத்திடத்தேயிருந்து கண்ணீர் வாராநிற்க, நீ ஒரு கால் அளித்தலிற், சிறிது செவ்வி பெற்றாளாயிருக்கும்படி வைத்த தலைவியைப் போலே, எம்மையும் வைக்கின்றாயென்று, காமக்கிழத்தி உள்ளுறையுவமங் கூறினாள். துனிமிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயாற் சுவறி அறுதலை உடைத்தாயொழுக, அவ்வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலிற் சிறிது மகிழ்பவள் முகம்போல என்ற ஏனையுவமந், தாமரைமலர் பனிவாரத் தளைவிடுமென்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நின்றது. |