உவமம், வெளிப்படத் தோன்றும் உவமமும், உள்ளுறை உவமமுமென இருவகைத்தாம். இவற்றுள் உள்ளுறை உவமமே திணையுணரும் உரிப்பொருட் பகுதிகளைச் சிறப்பித்தற்கு உரித்தாகும். ஏனைய உவமம் அவ்வாறு அகவொழுக்க வகைகளுக்குச் சிறவாதாகையால், அகத்துறைகளில் திணையுணரும் பகுதிகளுக்கு அத்துணையா ஆட்சி பெறுதலில்லை ‘தள்ளாதாகும்” என்றதனால், ஏனைஉவமம் அருகிப் பயிலும் என்பதும், உள்ளுறை உவமம் அவ்வாறன்றிப் பெருவரவிற்றாம் என்பதும் பெறப்படும். |
உள்ளுறை உவமத்தின் பகுதியா யடங்கு மேனும், புறத்திற்கே பெரிதும் உரிமை கொள்ளும் ஏனை உவமம் போலாது அகத்திற்கே சிறந்துரிய தாதலின், இது உவம இயலிற் கூறப்பெறாது அகவொழுக்கம் கூறும் இத்திணையிற் கூறப்பட்டது. ஏனை உவமத்தை ‘அகத்திணைக்குரித்தல்லாதது’ என ஏனை உவமச்சூத்திரத்தின் கீழ் விரிவுரையில் நச்சினார்க்கினியர் கூறுவர். சான்றோர் செய்யுட்களில் அருகிய ஆட்சி அகத்திணையிலும் ‘ஏனை உவமம்’ பெறுதலின், அதனை அறவே அகத்திணைக்கு உரித்தில்லை என விலக்குதல் பொருந்தாது. இன்னும் இளம்பூரணர் உள்ளுறை உவமம் ஒழிந்த உவமம் என இருவகையாலும் ‘திணையுணர்வகை தப்பாதாகும் எனக் கூறுவதாலும், ஏனை உவமத்திற்கு அருகியேனும் அகத்திணைக்கண் ஆட்சி உண்மை தெளியப்படும். |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் உள்ளுறைவமமே திணையுணர்த்தும் ஏனையுவமம் உணர்த்தாது என்பது கூறுகின்றது. |
(இ-ள்) உள்ளுறையுவமமானது திணையுணர்த்தும் கூறுபாட்டை ஏனையுவமம் உணர்த்தாது போலத்தான் தள்ளாது உணர்த்தும் என்றவாறு. |
இதனாற் சொல்லியது உள்ளுறை உவமமே உரிப்பொருளை உணர்த்தும் என்பதும் ஏனை உவமம் உரிப்பொருளைக் கொள்ளும் தொடர்பின்றி வரும் என்பதும் ஆம். |
பாரதியார் கூறுவது பொருந்தாது ஏனை உவமம் எல்லாவிடங்களிலும் அகத்தும் புறத்தும் வரையறையின்றிப் பயின்று வரும். |