(இ-ள்) உள்ளுறுத்து பொருள் இதனொடு ஒத்து முடிக என-(உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனொடு ஒத்து முடிக என’ உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்-உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம். |
எனவே உவமையாற் கொள்ளும் வினைபயன் மெய்உருவன்றிப் பொருளுவமையாற் கொள்ளப்படுவது. |
“வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டுங் குறுகும்-நிறைமதுச் சேர்ந்து உண்டாடுந் தன்முகத்தே செல்வி உடையதோர் வண்தா மரைபிரிந்த வண்டு.” |
இது வண்டோரனையர் மாந்தர் எனக் கூறுதலான் உவமிக்கப்படும் பொருள் புலப்படாமையின் உள்ளுறையுவமமாயிற்று1. இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று. |
(51) |
நச்சினார்க்கினியர் |
51. உள்ளுறுத்து......................உவமம். |
இதுவும் அங்ஙனம் பிறந்த உள்ளுறையுவமத்தினைப் பொருட்கு உபகாரம்பட உவமங்கொள்ளுமாறு கூறுகின்றது. |
1 தன்னிடத்தழகுடைய தண்ணிய தாமரையை அதனிடத்துள்ள நிறையும் தேனே உண்டு மகிழ்ந்த வண்டு வேற்று வண்டுக் கூட்டம் நீலமலரிற் படிந்தும் தேனுண்டு செல்ல அதனால் குறைந்த தேன்சுவையை விரும்பி அந்நீல மலரைச் சேரும் என்பது செய்யுட் பொருள். இதுவே உவமையாக அமைய இதன் உள்ளுறை பொருளாக, “குறையாத அழகிய தலைவியின் பால் நலனுண்டு பிரிந்த தலைவன் பலராலும் விரும்பித் துய்க்கப்பட்ட நலன் குறைந்த பரத்தையின் நலனை விரும்பி அங்குச் செல்வான் ஆனான்” என்பது அமைந்துளது. அணி நூலார் இதனை ஒட்டணி என்பர். இதில் உள்ள கருப்பொருள்கள் வண்டு, இன வண்டுகள் தாமரை, நீலம் என்பன. |