பக்கம் எண் :

காமம் சாலா இளமையோள் வயின் சூ.53417

பி. இ. நூ
 

நம்பி 241, 242
 

காமஞ் சாலா இளமை யோள்வயின்
குறிப்பறி வுறாது குறுகியாங் கவளொடு
இறப்பக் கூறுவது அகப்புறக் கைக்கிளை
அதுவே,
இறைமை இல்லோர்க்கும் இழிகுலத்தோர்க்கும்
முறைமையின் உரித்தே முன்னுங் காலை
 

இல. வி. அ 217 தொல்காப்பியச் சூத்திரமே.
 

இளம்பூரணர்
 

53. காமஞ் சாலா இளமை.................குறிப்பே.
 

மேல்   நடுவணைந்   திணைக்குரிய   பொருண்மையெல்லாம்   கூறினார்.   இது   கைக்கிளையாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)     காமம்  சாலா  இளமையோள்வயின்  -  காமம் அமையாத இளையாள் மாட்டு, ஏமம் சாலா
இடும்பை   எய்தி  -   ஏமம்  அமையாத இடும்பை எய்தி,  நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் -
புகழ்தலும்  பழித்தலுமாகிய   இருதிறத்தால்,   தன்னொடும்   அவளொடும்   தடுக்கிய  புணர்த்து-தனக்கும்
அவட்கும்   ஒத்தன  புணர்த்து,  சொல்  எதிர்பெறான் சொல்லி இன்புறல்-சொல் எதிர் பெறானாய்த் தானே
சொல்லி இன்புறுதல் புல்லித்  தோன்றும் கைக்கிளைக்  குறிப்பு-பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு.
 

‘பொருந்தித்     தோன்றும்’  என்றதனால் அகத்தொடு  பொருந்துதல் கொள்க. என்னை? ‘காமஞ் சாலா’
என்றதனால் தலைமைக்குக்  குற்றம்  வாராதாயிற்று.  ‘புல்லித்  தோன்றும்’ என்றதனால் புல்லாமற்றோன்றும்
கைக்கிளையும்  கொள்ளப்படும்.  அஃதாவது  காமஞ்சான்ற  தலைமகள்  மாட்டு  நிகழும் மனநிகழ்ச்சி. அது களவியலுள் கூறப்படுகின்றது1  (‘என்று’ என்பது எண்ணிடைச்  சொல். ஏகாரம் ஈற்றசை)
 


1 களவியலிற்  கூறப்படும்  இயற்கைப்  புணர்ச்சி  முன்  நிகழும்  காட்சி  ஐயம்  தெளிவு  என்பன
புல்லாமைக்குக் காரணம் அங்கே சொல்லும் சொல்லியின்புறலும் இல்லாமையே.