குறிப்பு: ‘கைக்கிளை’ என்பது ஒருமருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும் காமச்செவ்வி அறியாச்சிறுமியிடம் தலைமகனொருவனுக்குத் தன்னலமறந்து ‘அவள் பொருட்டே வாழ்வு’ எனக்கொள்ளும் காதற் பெற்றி தோன்றுங்கால், அது கைக்கிளை எனப்படும். காதலுணரும் பருவமுற்றாள் தன்னைக் காதலியாத வழிதான் அவளைக் காதலிப்பதை, ஆடவனுக்கு ‘நோந்திறப்’ பெருந்திணையாகக் கொள்வதல்லது செந்திறக்காதல் வகையாகப் பாராட்டுதல் பழந்தமிழ் மரபன்று, பருவமன்மையால் தன்னைக் காதலிக்க ஒல்லாத சிறுமியாயினும், அவள் தன் காதலுக்கு உரியாளாதலின் காதலன் எனைத்து வகையானும் அவள் நலம் பேணுவதும், தன் புரைதீர் காதலால் தன்னொடும் அவளொடும் ‘கொள்ளாத கூறாமல்’ பெருமை பேணும் பெற்றியனவே சார்த்திக் கூற்று நிகழ்த்துவதும், தனக்கு அவள் தந்த காதல் நோய்க்கு “அணியிழை (காமஞ் சாலாமையின்) தானே மருந்தாக’, வொல்லாமையால் அவள் அதற்கேற்ற பெற்றி மறுமாற்றம் கூறவொண்ணாளாயினும், அவள்பால் தன்னுணர்வுரைத்து மகிழ்வதும், குற்றமற்ற கைக்கிளையின் குறிகளாகும் என்பது இச்சூத்திரத்தில் வற்புறுத்தப்படுகிறது. |