பண்டைத் தமிழ்ப் புலவர் கொண்ட தூய கைக்கிளையின் பெற்றியும் பெண்மைப் பண்பும் பாராட்டாது, பிற்காலத்தில் பிறர் பெருந்திணையின்பாற்படும் புரைபடுமிழிந்த ஒரு தலைக்காமத்தைப் பெண்பாற் கைக்கிளை எனக் கொள்வாரானார். தம் புதுக்கொள்கைக்குத் தொல்காப்பியர் நூலில் இடமின்மை கண்டு வைத்தும் “புல்லித் தோன்றும் கைக்கிளை” எனலாம் “புல்லாமல் தோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும்; அது காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும்” எனவும், அது களவியலிற் கூறப்படுவது போலவும் பழைய உரைகாரர் கூறுவர். அவரைப் பின்பற்றி நாற்கவிராச நம்பியும் தன்னகப் பொருளில் ‘காமஞ் சான்ற இளமையோள் வயின்’ என்றே இலக்கணம் வகுத்துக் காமஞ்சாலா இளமையோள் பால் நிகழும் தலைவனின் தூய காதலைப பாராட்டாதொழிந்தார். |
காட்சி முதலியவற்றைக் கைக்கிளை எனக் கொள்ளாமல் காமக்குறிப்பாம் ஐந்திணை உரிப்பொருள்களின்பாற் படுத்தித் தொல்காப்பியர் இவ்வகத்திணையியலிலும் களவியலிலும் கூறுதலானும், களவு இருமருங்கொத்த அன்பினைந்திணையின்பாற் பட்டடங்குதலானும், அவற்றின் வேறுபட்ட பெருந்திணையைப் போலவே கைக்கிளையும் அவற்றுள் அடங்காத வேறு திணை ஆகாமை ஒருதலை. இச்சூத்திரத்திற் கூறப்படும் கைக்கிளை குற்றமற்ற பெற்றியதாதலின், பொருந்தாக் காமமாகிய பெருந்திணை போலாது கைக்கிளை பொருந்தும் தூய காதலாம் எனற்கே “புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” என இந்நூலார் விளங்க வைத்தார். (புல்லுதல்-பொருந்துதல்-தழுவுதலுமாம்) |
“வாருறு வணரைம்பால்” என்னும் குறிஞ்சிக் கலியுள்” |
(58) |
“உளனாஎன் உயிரைஉண் டுயவுநோய் கைம்மிக இளமையா னுணராதாய் நின்தவ றில்லானும் களைநரின் நோய்செயும் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்.” |
(1) |
“நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் நலியுநோய் மடைமையான் உணராதாய் நின்தவ றில்லானும் இடைநில்லா தெய்க்குநின் உருவறிந் தணிந்துதம் |