பாரதியார் |
55. முன்னைய... ... ... ... என்ப |
கருத்து: இது, கைக்கிளை பெருந்திணைகள் ஆகிய இரு சூத்திரங்கட்குமுன், ஐந்திணைகளுள் அடங்காமல் திணைக்கு உரிப்பொருள்களாய் அகப்பகுதியில் வரும் பொது இயல்களாகக் கூறப்பட்ட நான்கும், கைக்கிளை பெருந்திணையாய இரண்டனுள் முன்னதாய கைக்கிளைக்கு உரியவாதல் கூறுகிறது. |
பொருள்: முன்னைய நான்கும் மேல் கைக்கிளை பெருந்திணைச் சூத்திரங்கட்கு முன்னே கூறிய (1) நிகழ்ந்தது நினைத்தல் (2) நிகழ்ந்தது கூறி நிலையல் (3) மரபுநிலை திரியாது விரவும் பொருள் விரவல் (4) உள்ளுறை உவமம் திணைபுணர் வகையாதல் என்ற நான்கும்; முன்னதற்கென்ப-கைக்கிளை பெருந்திணையாகிய இரண்டனுள் முற்கூறிய கைக்கிளைக்காம் எனக் கூறுவர் பொருள் நூற்புலவர். |
குறிப்பு: ‘என்ப’ என்பதற்கேற்பப் “பொருள் நூற்புலவர்” எனும் எழுவாய் அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. “நிகழ்ந்தது நினைத்தல் முதல்” ‘உள்ளுறை உவமம் திணை புணர் வகை’ யாதல் வரை கூறப்பட்ட நான்கும் அன்பினைந் திணைகளுக்குப் பொதுவாய்த் திணைக்குரிப் பொருளாய் அமைதலால், அன்பினைந்திணைகளின் இயல்பு கூறும் பகுதிகளின் இறுதியில் அவை அடைவு பெறக் கூறப்பெற்றன. இவை நடுவணைந்திணைகளுக்குச் சிறந்தூரியவாதல் போலவே, புரை, தீர்ந்த செந்திறக் கைக்கிளையின் கண்ணும் வந்து பயிலும்; ஆனால் நோந்திறப் பொருந்தாப் பெருந்திணையின்கண் இவை ஆட்சி பெறா. |
தொல்காப்பியர் நூலில் குற்றமற்ற கைக்கிளை ஒன்றே கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர் கைக்கிளையாகக் கருதும் தமிழ் வழக்கல்லாத தவறுடைய கூட்டமெல்லாம் பெருந்திணையாகக்கருதலே ஆன்ற மரபாகும். குற்றமற்ற செந்திறக் கைக்கிளையில், தூய ஒருதலைக் காதலுடையாள் ‘தருக்கிய புணர்த்துச் சொல்லியின்புறூஉம்’ காலத்துத்தன் காதலியைப் பற்றிய முன் நிகழ்ச்சிகள் அவன் நினைத்தற்கு ஏதுவாதலும் பின் கூறி இன்புறப் பெறுதலும், பிற விரவும் பொருள் விரவலும், |