இனி, இவ்வியலில் மேற்கூறிய நான்கு அகத்திணைகளின் பெதுவிலக்கணங்கள், இவ்வகத்திணையியலில் விளக்கிய உரிப்பொருளான ஒத்தகாமத்திணை ஐந்திறகே உரியனவா? அவற்றின் பின்னர்க்கூறும் திணைகள் இரண்டிற்குந் தொடர்புடையனவா? எனுமைய மகற்றித் தெளிப்பது இன்றியமையாததாகும். ஆகவே இச்சூத்திரத்தால் இந்நூலார் அவ்வினாக்களுக்குரிய விடை யிறுத்து விளக்கலாயினர், என்பதை இங்குத் தெளிதல் எளிது இதில் “முன்னதற்கென்ப” என்பது காலம் பற்றி முன்னதையே குறிப்பதாகக் கொண்டு இதற்கு முற்கூறிய திணையிரண்டனுள் பெருந்திணைக்கு முன்னதான கைக்கிளையைச்சுட்டும் என்று நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் பொருள் காணுதலால், அம்முறையே இச்சூத்திரத்தில் வரும் “முன்னைய நான்கும்” என்ற சொற்றொடரும் காலத்தால் இதற்கு முற்பகுதியில் கூறப்பெற்ற நான்கேயாதல் வேண்டும் என்பது தேற்றமாகும். அவ்வாறு கூறிய நான்கு குறிப்புகள் பெருந்திணை கைக்கிளைகளை விளக்கும் இரு சூத்திரங்களுக்கும் முன் கூறப்பெற்றுள. ஆதலால் அவற்றையே இங்கு “முன்னைய நான்கும்” என்று சுட்டினர் இந்நூலார் எனத் துணிவதே பொருத்தமாகும். அவற்றின் விவரமும் பொருத்தமும் இனி ஆராய்வோம். |
கைக்கிளை பெருந்திணைகளின் இலக்கணம் கூறும் முன்னும் அன்பினைந்திணைகளின் பொது இலக்கணப் பகுதி கூறி முடிந்த பின்னும், அவ்வைந்திணைகளுக்குப் பெருவரவினவாய் வந்துதவும் நான்கு செய்திகளைப்பற்றி விதிமுகத்தானும் விலக்கு வகையானும் இந்நூலார் விளக்கிச் சில சூத்திரம் யாத்துளர் என மேலே காட்டினோம்.அவை, |