பக்கம் எண் :

464தொல்காப்பியம் - உரைவளம்

சிலப்பதிகாரம்     சிந்தாமணி   போன்ற   பண்டைச்   செய்யுட்களில், யாண்டும் தலைமக்கள் தம்முள்
இயற்பெயர்     சுட்டி     அகவி      அவ்வளவுதல்     கூறப்பெறாமையும்,    அவ்வாறு    அளவுதல்
குறியாப்பிறவிடங்களில் தலைமக்கள் பெயர் கூறப்பெறுதலும் ஈண்டுக் கருதத்தக்கன.4
 

காதலாற்    கலந்தார்க்கு,  “ஈருயிரென்பார் இடைதெரியார்” அவர் தம்முள் ஒருயிராக உணர்வாராதலின்
அவ்வுணர்ச்சி வயப்பட்டாருள்   ஒருவர் ஒருவரை தம்மில்  வேறுபட்ட பிறர்போலப்  பெயர் சுட்டியளவுதல்
இருமை  நீங்கிய அவர் ஒருமைக்  காதலுணர்ச்சியோடு   இயைவதன்று;   ஆதலின் அவ்வாறு அளவுங்கால்
‘என்னுயிர்’  ‘என்  கண்’  என்பன    போன்ற    வேறன்மையை  விளக்குந்தற்கிழமைக்  காதற் குறியீடுகள்
கூறியளவுதலே இயல்பாகும்.
 

(1) “இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே;
இவன்வயிற் செலினே இவட்கும் அற்றே;
காக்கை யிருகணின் ஒருமணி போலக்
குன்றுகெழு நாடற்கும் கொடிச்சிக்கும்
ஒன்றுபோல் மன்னிய சென்றுவா ழுயிரே.”
 

(2) “காணா மரபிற் றுயிரென மொழிவோர்
நாணிலர், மன்ற பொய்மொழிந் தனரே;
யாஅங் காண்டுமெம் அரும்பெற லுயிரே;
சொல்லும், ஆடும், மென்மெல இயலும்,
கணைக்கால் நுணகிய நுசுப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.”
 

என்ற பழம் பாட்டுக்கள் காதலிற் கலந்தாரின் ஒருமையுணர்ச்சியை வலியுறுத்தும்.
 


4 இப்பகுதிக்கருத்தும் பொருந்தாது சிலப்பதிகாரம்  முதலியன  அகன்  ஐந்திணை இலக்கியங்கள் அல்ல.