அவ்வாறு ஒன்றுபட்ட காதற்றலை மக்கள் தம்முள் வேறாயினார் போல ஒருவரையொருவர் பெயர்கூறி யளவளாவுதல் தம் காதற் செவ்விக்கியையாதாகலானும், அதுவேயுமன்றி ஒத்த அன்புக்கு இன்றியமையாத நன் மதிப்பைப் பிறர்போல் தம்முள் பெயர் சுட்டி அழைப்பது வளர்க்குமாறில்லை யாகலானும்-தலைப்படுங்கால் ஒன்றிய காதலர் தம் உளத்துவளர்காதல் கமழும் மொழிகளால் ஒருவரையொருவர் பாராட்டுவதன்றிப் பெயர் சுட்டியளவுதல் மெய்க்காதற் குறியன்றாகலானும், அவ்வுணர்வியலுக் கேற்பப் புலனெறி வழக்கில் தலைமக்கள் ஒருவரையொருவர் அன்பொழுக்கத்தில் தம்முட் பெயர்சுட்டி அளவுதல் மரபன்றென இதில் வற்புறுத்தப்பட்டது. |
இதுவும் இதனையடுத்த கீழ்ச்சூத்திரமும் அகப்பகுதி அனைத்திலும் தலைமக்கள் பெயர்கூறப் பெறாமையே மரபெனக் கூறுங்குறிக்கோளுடையன போலக்கொண்டு, உரைகாரர் இவ்விரண்டிற்கும் வெவ்வேறு பொருள் கண்டனர், யாண்டும் பெயர் கூறாமையே தொல்காப்பியர் கருத்துமாமேல், “மக்கள் நுதலிய அகனைந்திணையுள், தலைவனும் தலைவியும் பெயர்கூறப் பெறார்” என்று இதனிலும், ‘அகத்திணை மருங்கில் வழக்காறில்லை” என்றடுத்த பின்சூத்திரத்திலும் தெளிய விளக்கி விலக்கியிருப்பர் ‘அகத்திணை ஏழனுள்’ அல்லது ‘அகத்திணைமருங்கில்’ என்னாது ‘அகனைந்திணையும்” என்றும், ‘தலைவனும் தலைவியும் பெயர் கூறப்பெறார்’ அல்லது ‘யாண்டும் கிழவோர் பெயர் கூறப்பெறார்’ என்னாமல், ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்” என்று இச்சூத்திரத்திலும் “அகத்திணை மருங்கின் அளவுதலிலவே” என அடுத்த கீழ்ச் சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறிப்போந்ததால் அவர்க்கது கருத்தன்மை தேற்றமாகும். |
(1) ஒத்தகாதற் றலைமக்கள் அன்பளவுதலில் தம்முள் பெயர் சுட்டாராகையால் ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறார்’ என்றும், (2) அவ்வாறு காதலிருவர் தம்முள் ஆதரவுபட்டு அளவுதல் கைக்கிளை பெருந்திணைகளிலின்மையால் அவ்விரண்டையும் விலக்கி, “அகனைந்திணை” என்றெண்குறித்தும், (3) பெயர் சுட்டி ‘அளவுதல்’ அன்புத்திணை அனைத்திலும் வழக்காறன்மையால் “அகனைந்திணையும்” என முற்றும்மை கொடுத்தும் இங்குத் தொல்காப்பியர் கூறிய குறிப்புத் தேறற்பாற்று. |