இனி, தமிழகத்தில் செய்யுள் வழக்கேயன்றி உலகியல் வழக்கிலும் இம்மரபுண்மை பண்டை மரபழித்துப் பெண்டிரை யிழித்துமகிழ் பிறநாகரிகம் புகுந்த பிற்காலத்தமிழகத்திற் போலாது, அடிப்பட்ட பழந்தமிழ் மரபு பல வழுவாமற் பேணும் ஈழத்தில் இற்றை ஞான்றும் காணப்படும். நேரிற் பெயர் சுட்டாமை பெண்டிர்க்குப் போலவே ஆடவர்க்கும் உரித்தாய்க் கணவனும் மனைவி பெயர் சுட்டி அளவா வழக்கும், ஒருதலையாக இருபாலோரும் பன்மைக்குரிய இருபாற் பொதுச் சொற்களால் பேணிப் பேசித் தம்முள் அளவுதலும், தம்முள் அளவளவா இடங்களில் ஒப்ப இருபாலோரும் ஏற்புழி ஒருவர் பெயரை மற்றவர் கூறலும், ஈழத்தமிழருள் இன்றும் வழங்கக் காண்பாம். சிங்களர் முதலிய அந்நாட்டுப் பிறமக்களுள் என்றும் இம்மரபின்மையால், இது தமிழர் ஆண்டுத் தம்மொடு கொடு போய்க்கையாளும் பழமரமேயாதல் வேண்டும். |