பக்கம் எண் :

புறத்திணை மருங்கின் பொருந்தின் சூ.58471

மானமா லென்றே தொழுதேன், தொழுதகைப்
போனவா பெய்த வளை”
 

என்னும் பட்டினப் பாலைத் தலைவனின் இயற்பெயர் சுட்டும் அகத்துறை வெண்பாவும்,
 

“நெடுவரைச் சந்தன நெஞ்சங் குளிர்ப்பப்
படுமடும் பாம்பேர் மருங்குல் - இடுகொடி
ஓடிய மார்பன் உயர்நல் லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும்.”

 

என்னும்  ஓய்மா  நாட்டு  நல்லியக்கோடன்  இயற்பெயர்  சுட்டும்  பழைய வெண்பாவும்  வலியுறுத்தும்.
இவ்விரண்டிடத்தும் தலைவி தலைவன் பெயர் கூறுதல் காண்க.
 

“தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்தது கொல்
பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான் கொல்?
மாஅ மிசையான்கொல்? நன்னன் நறுநுதலார்
மாஅமை யெல்லாம் பசப்பு.”

 

என்னும் பழைய வெண்பாவிலும் அகத்துறையில் தலைவன் பெயர்சுட்டுதல் காண்க.
 

இவை   கைக்கிளை பாக்காளதலிற்  பெயர் கூறப்பெற்றது  என்பார்க்கு, பெண்பாற் கைக்கிளை பிற்காலப்
பிழை   வழக்காவதன்றிப்  பண்டைப்புலவர்   கொண்ட   ஆன்ற   வழக்கன்மையானும்,   தொல்காப்பியர்
கைக்கிளையை   ஆடவர்க்கே   அமைத்துப்பெண்டிரின்   ஒரு   தலைக்காமம்  முதலிய மற்றனைத்தையும்
பெருந்திணையிலடக்கி   யமைவாராதலானும்,   இப்பழைய   வெண்பாக்கள்  அன்பினைந்திணைத் துறையே
கூறுவனவாமெனக்    காட்டி    மறுக்க   மேலும்,  இதில்,   “ஐந்திணைமருங்”  கென்னாது,  ‘அகத்திணை
மருங்கில்’1    என்றதனால்,   இந்நூற்பாக்   கட்டளைக்குக்   கைக்கிளை  விலக்கின்மையாலுமவர்  கூற்றுப்
பொருந்தாதென்க
 


1   ஐந்திணை   என்றால்   குறிஞ்சி   பாலை   முல்லை  மருதம்  நெய்தல்  என்பனவற்றைக்குறிக்கும்.
அகத்திணை என்றால் அவற்றுடன் கைக்கிளை பெருந்திணைகளையும் குறிக்கும்.